கொரோனா சிகிச்சை மைய முறைகேடு - ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வாலிடம் அமலாக்கத்துறை விசாரணை

கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வாலிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
மும்பை,
கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வாலிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர்.
கொரோனா சிகிச்சை மைய முறைகேடு
மும்பையில் கொரோனா பரவலின் போது ஜம்போ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகார் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சமீபத்தில் கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையினர் சஞ்சய் ராவத் எம்.பி.க்கு நெருக்கமான தொழில் அதிபர் சுஜித் பட்கர், உத்தவ் தாக்கரே கட்சியின் நிர்வாகி சுரஜ் சவான், ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால் உள்ளிட்டவர்களுக்கு சொந்தமான 15 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையின் போது அதிகாரிகள் ரூ.2.4 கோடி மதிப்பிலான நகைகள், ரூ.68 லட்சம் ரொக்கம், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்து இருந்தனர். மேலும் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால், சுரஜ் சவான் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தது. இதில் கடந்த 26-ந் தேதி சுரஜ் சவானிடம் அமலாக்கத்துறை 8 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தியது.
ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் விசாரணை
இந்தநிலையில் கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பான விசாரணைக்கு நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால் அமலாக்கத்துறை முன் ஆஜரானார். அவர் தென்மும்பை பல்லர்டு எஸ்டேட் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு காலை 11.30 மணியளவில் வந்தார். அவரிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். கொரோனா சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாக ஒப்பந்தங்கள் விடப்பட்ட போது சஞ்சீவ் ஜெய்ஸ்வால் மாநகராட்சி கூடுதல் கமிஷனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மாநகராட்சியில் நடந்து வரும் முறைகேடுகளை கண்டித்து இன்று (சனிக்கிழமை) உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியினர் பிரமாண்ட போராட்டம் நடத்த உள்ளனர். இந்தநிலையில் கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ். அதிகாரியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






