'ஆடையை கழற்றி சோதனை செய்வது கைதிகளின் தனியுரிமைக்கு எதிரானது'-கோர்ட்டு உத்தரவு

விசாரணை கைதிகளின் ஆடையை கழற்றி சோதனை நடத்துவது, அவர்களின் தனியுரிமைக்கு எதிரானது என மும்பை கோர்ட்டு உத்தரவில் கூறியுள்ளது.
மும்பை,
விசாரணை கைதிகளின் ஆடையை கழற்றி சோதனை நடத்துவது, அவர்களின் தனியுரிமைக்கு எதிரானது என மும்பை கோர்ட்டு உத்தரவில் கூறியுள்ளது.
ஆடைகளை கழற்றி சோதனை
மும்பையில் 1993-ம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு மும்பை ஜெயிலில் அடைக்கப்பட்டு இருப்பவர் அகமது கமல் சேக். இவர் சமீபத்தில் மும்பை கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது:-
வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்து செல்லும் போது, ஒவ்வொரு முறையும் ஜெயில் நுழைவு வாசல் பகுதியில் காவலர்கள் மற்ற கைதிகள் முன்னிலையில் என்னை ஆடைகளை கழற்ற சொல்லி நிர்வாணம் ஆக்கி சோதனை செய்கின்றனர். இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கும் போது மிகவும் தகாத வார்த்தைகளாலும், அவதூறாகவும் திட்டுகின்றனர். இது என்னை அவமானப்படுத்துவது மட்டுமின்றி, தனிப்பட்ட உரிமைக்கு எதிரானது.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
அடிப்படை உரிமைக்கு எதிரானது
மனுவை நீதிபதி பி.டி. செல்கே விசாரித்தார். அப்போது ஜெயில் நிர்வாகம் தரப்பில், ஜெயிலில் அப்படி ஒரு சோதனையே நடத்தப்படவில்லை என கூறப்பட்டது. ஜெயில் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறினர்.
மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறியிருப்பதாவது:-
மனுதாரர் மட்டுமின்றி வேறு சில விசாரணை கைதிகளும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கோர்ட்டில் கூறியுள்ளனர். விசாரணை கைதிகளை ஆடையில்லாமல் சோதனை செய்வது அவர்களின் தனிப்பட்ட அடிப்படை உரிமைக்கு எதிரானது. அது கைதியை அவமானப்படுத்துவது ஆகும். தகாத, இழிவான வார்த்தையை பயன்படுத்துவதும் விசாரணை கைதியை அவமானப்படுத்துவது தான்.
ஸ்கேனர் மூலம் சோதனை
ஜெயிலில் காவலர்கள் ஸ்கேனர், கருவிகள் மூலம் மட்டுமே விசாரணை கைதிகளை சோதனை நடத்த வேண்டும் என மும்பை மத்திய ஜெயில் சூப்பிரண்டுக்கு உத்தரவிடுகிறேன். ஒருவேளை ஸ்கேனர்கள், கருவிகள் இல்லை என்றால் காவலர்கள் விசாரணை கைதிகளை நிர்வாணமாக்கி சோதனை நடத்தவோ அல்லது தகாத வார்த்தைகளால் திட்டவோ கூடாது. விசாரணை கைதிகளை தகாத முறையில் நடத்தவோ அல்லது அவமானப்படுத்தவோ கூடாது.
இவ்வாறு நீதிபதி கூறினார்.






