ஆகஸ்ட் 19-ந் தேதிக்குள் தீ பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த குழு அமைக்க வேண்டும்- அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

தீ பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த ஆகஸ்ட் 19-ந் தேதிக்குள் குழுவை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
தீ பாதுகாப்பு விதிகளை அமல்படுத்த ஆகஸ்ட் 19-ந் தேதிக்குள் குழுவை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சிறப்பு வரைவு விதிமுறைகள்
மும்பையில் அடிக்கடி கட்டிடங்களில் ஏற்படும் தீ விபத்துகளால் உயரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்தநிலையில் அபா சிங் என்ற வக்கீல், மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
அதில், தீ பாதுகாப்பு குறித்த சிறப்பு வரைவு விதிமுறைகள் மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு 2009-ம் ஆண்டு வெளியிடப்பட்டவை. தற்போதைய நிலவரத்துக்கு தகுந்தவாறு சிறப்பு வரைவு விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும் என கோரியிருந்தார்.
சிறப்பு குழு
தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி எம்.எஸ். கார்னிக் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்த வார தொடக்கத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மாநில அரசு வக்கீல் ஷிட்டன் வெனிகான்கர், "புதிய வளர்ச்சி கட்டுப்பாடு மற்றும் திட்டமிடல் விதிமுறைகளில்(டி.சி.பி.ஆர்) 2009-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட தீ பாதுகாப்பு வரைவு விதிகளை சேர்க்கும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது. முன்னதாக, இதற்காக சிறப்பு குழு அமைக்க வேண்டும். குழுவை அமைக்க அரசுக்கு 3 முதல் 4 மாதங்கள் தேவைப்படும்" என்றார்.
ஆகஸ்ட் 19-ந் தேதிக்குள்..
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், 2009-ம் ஆண்டு தீ பாதுகாப்பு விதிகள் குறித்து ஆய்வு செய்ய துறை சார்ந்த வல்லுநர்கள் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவை வருகிற ஆகஸ்ட் 19-ந் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் அவர்கள், "நடைமுறையில் இருக்கும் வரைவு விதிகள் 2009-ம் ஆண்டில் உருவானவை. நாம் இப்போது 2022-ம் ஆண்டில் இருக்கிறோம். இதற்கு ஏற்றார்போல் நமது விதிகளை மேம்படுத்த வேண்டுமா என்று குழு பரிசீலிக்கும்" என்றனர்.
இதைத்தொடர்ந்து வழக்கை அடுத்த மாதம் 22-ந் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.






