புனே எரவாடா சிறையில் மரண தண்டனை கைதி தூக்குப்போட்டு தற்கொலை
கோபர்டி பலாத்காரம், கொலை வழக்கில் தொடர்புடைய மரண தண்டனை கைதி புனே எரவாடா சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புனே,
கோபர்டி பலாத்காரம், கொலை வழக்கில் தொடர்புடைய மரண தண்டனை கைதி புனே எரவாடா சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கொடூர சம்பவம்
அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள கோபர்டி பகுதியை சேர்ந்த மராத்தா சமுதாயத்தை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 13-ந்தேதி மர்ம நபர்களால் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். சிறுமியின் உடல்களில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. மேலும் அவளது கை, கால்கள் உடைக்கப்பட்டு இருந்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குறிப்பாக மராத்தா சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மராத்தா சமூதாயத்தினர் மாநிலம் முழுவதும் பேரணியில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜிதேந்திர பாபுலால் ஷிண்டே(வயது 32), சந்தோஷ் கோரக் பவால் மற்றும் நிதின் கோபிநாத் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
தூக்குப்போட்டு தற்கொலை
இவர்கள் மீதான வழக்கை விசாரித்த அகமத்நகர் மாவட்ட செசன்சு கோர்ட்டு கடந்த 2017-ம் ஆண்டு 3 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இவர்கள் 3 பேரும் புனே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜிதேந்திர பாபுலால் ஷிண்டே நேற்று தனது அறையில் கதவுக்கு மேல் உள்ள கம்பியில் துண்டில் தூக்குப்போட்ட நிலையில் தொங்கிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.