'ஜல்யுக்த் சிவர்' 2-வது கட்ட பணிகள் விரைவில் தொடங்கும்- பட்னாவிஸ் தகவல்

‘ஜல்யுக்த் சிவர்' 2-வது கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மும்பை,
'ஜல்யுக்த் சிவர்' 2-வது கட்ட பணிகள் விரைவில் தொடங்கும் என துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
பட்னாவிஸ் கனவு திட்டம்
தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாக இருந்த போது மராட்டியத்தில் 2014-ம் ஆண்டு 'ஜல்யுக்த் சிவர் அபியான்' என்ற நீர்வளத்திட்ட பணிகள் தொடங்கப்பட்டது. பட்னாவிசின் கனவு திட்டமான இதன் மூலம் கால்வாய்கள் தூர்வாரப்பட்டு, அகலப்படுத்தப்பட்டன. விவசாய குளங்கள் வெட்டப்பட்டன. ஆண்டுக்கு 5 ஆயிரம் கிராமங்களை வறட்சியில்லாத பகுதியாக மாற்ற வேண்டும் என்பது இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இந்த திட்டத்தில் அதிகளவில் முறைகேடுகள் நடப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டு இருந்ததை சுட்டிக்காட்டி கடந்த மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஆட்சியில் ஜல்யுக் சிவர் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.
விரைவில் 2-வது கட்ட பணிகள்
இந்தநிலையில் தற்போது இந்த திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என பட்ஜெட்டில் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் அறிவித்து இருந்தார். இது தொடர்பாக அவர் நேற்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:-
மராட்டியத்தில் 50 சதவீத பகுதியில் மழை பெய்யும் என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். நீரை பாதுகாப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை. நாங்கள் விரைவில் 2-வது கட்ட ஜல்யுக்த் சிவர் பணிகளை தொடங்குவோம். இந்த திட்டம் மூலம் 20 ஆயிரம் கிராமங்களில் தண்ணீர் சேமிக்கப்பட்டது. 37 லட்சம் ஹெக்டேர் நிலம் விவசாய நிலமானது. விவசாயிகள் ஆண்டுக்கு 2 போகம் விவசாயம் செய்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






