தாராவி குடிசை சீரமைப்பு திட்ட டெண்டர் தொடர்பான வழக்கு: அதானி குழுமத்திற்கு சாதகமாக செயல்படவில்லை - ஐகோர்ட்டில், அரசு பதில்


தாராவி குடிசை சீரமைப்பு திட்ட டெண்டர் தொடர்பான வழக்கு: அதானி குழுமத்திற்கு சாதகமாக செயல்படவில்லை - ஐகோர்ட்டில், அரசு பதில்
x
தினத்தந்தி 30 Aug 2023 7:45 PM GMT (Updated: 30 Aug 2023 7:45 PM GMT)

தாராவி குடிசை சீரமைப்பு திட்ட டெண்டர் குறித்த வழக்கில் அதானி குழுமத்திற்கு ஆதரவாக செயல்படவில்லை என ஐகோர்ட்டில் அரசு கூறியுள்ளது.

மும்பை,

தாராவி குடிசை சீரமைப்பு திட்ட டெண்டர் குறித்த வழக்கில் அதானி குழுமத்திற்கு ஆதரவாக செயல்படவில்லை என ஐகோர்ட்டில் அரசு கூறியுள்ளது.

மனுதாக்கல்

தாராவி குடிசைப்பகுதி மறுசீரமைப்பு திட்டத்தின் டெண்டர் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அதானி பிராப்பர்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு இந்த திட்டத்தை வழங்கிய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய அரசு எமிரேட்சை தளமாக கொண்ட நிறுவனமான செக்லிங்க் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதில் பழைய டெண்டர் முறைப்படி ரத்து செய்யப்படவில்லை. இது அரசியல் உள்நோக்கம் கொண்டது. பழைய டெண்டரில் இருந்த பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த டெண்டரில் இல்லை. மேலும் டெண்டர் எடுத்த நிறுவனத்திற்கு சாதகமாக நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன என்று குற்றம் சாட்டி இருந்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயா மற்றும் நீதிபதி அரிப் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதுகுறித்து பதில் அளிக்குமாறு அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில் மாநில வீட்டு வசதித்துறை துணை செயலாளர் நேற்று ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறி இருப்பதாவது:-

பொய்யான குற்றச்சாட்டு

மனுதாரர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் அரசியல் உள்நோக்கத்துடன் பழைய டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக பொய்யான மற்றும் பொறுப்பற்ற குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். முறையான செயல்முறைக்கு பின்னர் தான் டெண்டர் செயல்முறைகள் ரத்து செய்யப்பட்டன. புதிய டெண்டர் அதானி நிறுவனத்திற்கு சாதகமாக வெளியிடப்பட்டது என்பதை நான் மறுக்கிறேன். புதிய டெண்டர் செயல்முறைகள் முற்றிலும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட்டது. உண்மையில் பழைய டெண்டரில் பங்கேற்றவர்களை விட புதிய டெண்டர் அதிக ஏலதாரர்களை ஈர்த்தது. எனவே மனுதாரர் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் நம்பகத்தன்மை அற்றவை. இந்த மறுசீரமைப்பு திட்டத்தை முறியடிக்க மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியும் முறியடிக்கப்பட வேண்டும். ஏனெனில் இது மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் தடையாக அமையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

டெண்டர் ரத்து

259 ஹெக்டேர் தாராவி மறுசீரமைப்பு திட்டத்திற்கான 2022-ம் ஆண்டு டெண்டரை அதானி குழுமம் அதிக ஏலத்தொகையான ரூ.5 ஆயிரத்து 69 கோடிக்கு எடுத்தது. 2018-ம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் டெண்டரை மனுதாரரின் நிறுவனம் ரூ.7 ஆயிரத்து 200 கோடி ஏலத்திற்கு எடுத்து இருந்தது. ஆனால் கொரோனா தொற்று மற்றும் ரஷியா- உக்ரைன் போர் போன்ற பல காரணங்களால் 2018-ம் ஆண்டு டெண்டர் ரத்து செய்யப்பட்டு 2022-ம் புதிய டெண்டர் விடப்பட்டது.


Next Story