கவுகாத்தி ஓட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதற்றத்துடன் இருந்தனர்- ஏக்நாத் ஷிண்டே தகவல்

கவுகாத்தி ஓட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதற்றத்துடன் இருந்தனர் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மும்பை,
கவுகாத்தி ஓட்டலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதற்றத்துடன் இருந்தனர் என ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
எம்.எல்.ஏ.க்கள் பதற்றம்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று குர்லா எம்.எல்.ஏ. மங்கேஷ் குடல்கர் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
கவுகாத்தி ஓட்டலில் எம்.எல்.ஏ.க்கள் கட்டாயப்படுத்தி தங்கவைக்கப்பட்டு இருந்ததாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அங்கு அவர்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தனர். அதிகாரத்திற்காக நாங்கள் அங்கு செல்லவில்லை. முதலில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பதற்றத்துடன் இருந்தனர். அதன்பிறகு சாதாரணநிலைக்கு வந்தனர்.
உண்மையான சிவசேனா
பால்தாக்கரேவின் இந்துத்வா கொள்கையை முன்எடுத்து செல்லவும், மராட்டியத்தின் வளர்ச்சிக்காகவே நாங்கள் அதிருப்தி அணி ஆனோம். நாங்கள் எல்லாவற்றுக்கும் விமர்சிக்கப்பட்டோம். எனினும் கவுகாத்தி ஓட்டலில் நாங்கள் பொறுமையாக இருந்தோம். நாங்களே உண்மையான சிவசேனா.
நாங்கள் அநீதியை சகித்து கொள்ள மாட்டோம். கவுகாத்தியில் நாங்கள் தினந்தோறும் கூட்டம் நடத்தினோம். முதலில் நாங்கள் பதற்றமாக இருந்தோம். மெதுவாக எங்கள்பலம் அதிகரித்தது.
இவ்வாறு அவர் பேசினார்.






