15 நாட்களில் அணைகளின் நீர்மட்டம் 2 மடங்காக அதிகரிப்பு


15 நாட்களில் அணைகளின் நீர்மட்டம் 2 மடங்காக அதிகரிப்பு
x

மராட்டியத்தில் ஜூலை மாதம் கொட்டி தீர்த்த கனமழையால் 15 நாட்களில் அணைகளின் நீர்மட்டம் 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் ஜூலை மாதம் கொட்டி தீர்த்த கனமழையால் 15 நாட்களில் அணைகளின் நீர்மட்டம் 2 மடங்காக அதிகரித்து உள்ளது.

கொட்டித்தீர்த்த மழை

மராட்டியத்தில் கடந்த மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. எனினும் பெரும்பாலான நாட்கள் மழை பெய்யவில்லை. ஒருசில நாட்கள் லேசான மழையே பெய்தது. எனவே கடந்த 1-ந் தேதி மராட்டியத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் 24.07 சதவீதமாக இருந்தது.

இந்த மாதம் தொடக்கம் முதலே மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கடந்த ஒரு வாரமாக கொங்கன், மேற்கு மராட்டியத்தின் பல பகுதிகள், மரத்வாடா, விதர்பா உள்ளிட்ட பகுதிகளில் மழை இடைவிடாமல் கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக நாசிக், புனே, ரத்னகிரி, அமரவாதி உள்ளிட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மாநிலம் முழுவதும் அணைகளின் நீர்மட்டமும் கிடு, கிடுவென உயர்ந்தது.

2 மடங்கு அதிகரிப்பு

குறிப்பாக கடந்த 10-ந் தேதி அணைகளில் 33.3 சதவீதம் தண்ணீர் இருந்தது. ஆனால் அடுத்த 5 நாட்களில் (15-ந் தேதி) அணைகளின் நீர்மட்டம் 53.73 ஆக அதிகரித்தது. இதேபோல 1-ந் தேதியுடன் ஒப்பிடுகையில் மாநிலத்தில் 15 நாளில் ஏரிகளின் நீர்மட்டம் 2 மடங்கு அதிகரித்தது.

கடந்த ஆண்டு ஜூலை 15-ந் தேதி மாநிலத்தில் உள்ள அணைகளில் 35.53 சதவீதம் மட்டுமே தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை மாநில நீர்வளத்துறை தெரிவித்து உள்ளது.

அதிக மழை பொழிவு

இதேபோல மாநிலத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமாக 133.1 சதவீதம் மழை பெய்து உள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி நேற்றுமுன் தினம் வரை மாநிலத்தில் 49 செ.மீ. மழை பெய்து உள்ளது. வழக்கமாக மாநிலத்தில் இந்த காலத்தில் 37 செ.மீ. மட்டுமே மழை பெய்யும். எனவே வழக்கத்தைவிட மாநிலத்தில் அதிகமாக 12 செ.மீ. மழை பெய்து உள்ளது.



Next Story