கட்டுமான அதிபரின் ரூ.1¾ கோடி நகை, பணம், காருடன் தலைமறைவான டிரைவர் கைது


கட்டுமான அதிபரின் ரூ.1¾ கோடி நகை, பணம், காருடன் தலைமறைவான டிரைவர் கைது
x
தினத்தந்தி 22 Oct 2023 7:30 PM GMT (Updated: 22 Oct 2023 7:31 PM GMT)

மும்பை கட்டுமான அதிபரின் ரூ.1¾ கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் காருடன் தலைமறைவான டிரைவரை போலீசார் அகோலாவில் கைது செய்தனர்.

மும்பை,

மும்பை கட்டுமான அதிபரின் ரூ.1¾ கோடி மதிப்புள்ள நகை, பணம் மற்றும் காருடன் தலைமறைவான டிரைவரை போலீசார் அகோலாவில் கைது செய்தனர்.

காருடன் தப்பி ஓட்டம்

மும்பை மரோல் நாக்கா பகுதியில் கட்டுமான அலுவலகம் நடத்தி வருபவர் திரேந்திரா. கடந்த 11-ந்தேதி ஜோகேஸ்வரியில் ஒருவரை சந்திக்க டிரைவர் சந்தோஷ் சவான் என்பவருடன் காரில் புறப்பட்டு சென்றார். காரில் ரூ.88 லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம், செல்போன்கள் போன்றவை இருந்தது. இதனால் திரேந்திரா டிரைவர் சந்தோஷ் சவானிடம் காரை விட்டு வெளியே இறங்க வேண்டாம் என கூறி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த போது கார் மற்றும் டிரைவரை காணவில்லை. மேலும் டிரைவரின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த திரேந்திரா போலீசில் புகார் அளித்தார்.

செல்போனை வீசிய டிரைவர்

இந்த புகாரின் படி போலீசார் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் டிரைவர் சந்தோஷ் சவான் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்புள்ள நகை, பணம், காருடன் தப்பி சென்றது தெரியவந்தது. வழியில் தான் உபயோகப்படுத்தி வந்த செல்போனை வெளியே வீசி உள்ளார். இதனால் அவரது செல்போனின் சிக்னலை வைத்து அவர் எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இருப்பினும் போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அகோலாவில் உள்ள ஆலந்தி என்ற இடத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சந்தோஷ் சவானை பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 36 லட்சம் மதிப்புள்ள கார் உள்பட நகைகளை பறிமுதல் செய்தனர். மீதி ரூ.50 லட்சத்தை செலவழித்தாக அவர் தெரிவித்தார்.


Next Story