மும்பையில் 15 மாடி குடியிருப்பில் தீ; முதியவர் பலி
மும்பையில் உள்ள 15 மாடி குடியிருப்பில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் முதியவர் ஒருவர் பலியானார்
மும்பை,
மும்பை தாதர் கிழக்கு இந்து காலனி பகுதியில் 15 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. அங்கு 13-வது மாடியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று காலை 8.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் கட்டிடத்தை கரும்புகை சூழ்ந்தது. கட்டிடத்தில் வசித்தவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். 13-வது மாடியில் சிக்கி தவித்த சச்சின் பட்கர் (வயது 60) என்பவரை மீட்டு அவர்கள் சயான் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனர். மூச்சுத்திணறல் காரணமாக அவர் உயிரிழந்தது தெரியவந்தது. வீட்டில் பற்றிய தீயை வீரர்கள் சுமார் ½ மணி நேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்தில் வேறு யாரும் காயமடையவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.