ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்கவேண்டும்; சபாநாயகருக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவு எடுக்க காலக்கெடுவை நிர்ணயிக்கவேண்டும்; சபாநாயகருக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 19 Sept 2023 1:00 AM IST (Updated: 19 Sept 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க ஒரு வாரத்திற்குள் காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான தகுதி நீக்க மனுக்கள் மீது முடிவெடுக்க ஒரு வாரத்திற்குள் காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

தகுதி நீக்கம்

சிவசேனா கட்சியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட பிளவின் காரணமாக அக்கட்சியின் தலைமையில் நடைபெற்றுவந்த மகா விகாஸ் அகாடி கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை இழந்தார். இதன்பின்னர் சிவசேனாவின் அதிருப்தி அணிக்கு தலைமை தாங்கிய ஏக்நாத் ஷிண்டே மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுடன் இணைந்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இந்த நெருக்கடியான காலகட்டத்தில் உத்தவ் தாக்கரே அணியில் தலைமை கொறடாவாக இருந்த எம்.எல்.ஏ. சுனில் பிரபு ஆட்சியை காப்பாற்றும் நடவடிக்கையாக ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 16 சிவசேனா எம்.எல்.ஏ.க்களை கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகருக்கு மனு கொடுத்தார்.

விசாரணை தொடக்கம்

ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விட்டபோதும் இந்த தகுதி நீக்கம் குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. இந்த வழக்கில் கடந்த மே மாதம் 11-ந் தேதி தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட்டு, 16 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் குறித்து தற்போதைய சபாநாயகர் நியாயமான காலத்திற்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. ஆனால் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததை அடுத்து தகுதி நீக்க மனுக்கள் மீது விரைவாக முடிவெடுக்க சபாநாயகருக்கு கால வரையறை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி சார்பில் கடந்த ஜூலை மாதம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் சபாநாயகர் தனது அதிரடி நடவடிக்கையாக சிவசேனா கட்சியின் இரு அணிகளை சேர்ந்த அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். மேலும் சமீபத்தில் தகுதி நீக்க மனுக்கள் குறித்த தனது விசாரணையை தொடங்கினார்.

காலக்கெடு

இந்த நிலையில் உத்தவ் சிவசேனா கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், " சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு மதிப்பையும், கண்ணியத்தையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். சபாநாயகர் தகுதி நீக்கம் தொடர்பான செயல்முறைகளை முடிப்பதற்கான காலக்கெடுவை ஒரு வாரத்திற்குள் நிர்ணயிக்க வேண்டும் என்று தற்போது கோர்ட்டு உத்தரவிடுகிறது. இந்த காலக்கெடு குறித்த தகவலை சொலிசிட்டர் ஜெனரல் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.


Next Story