விமான பணிப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை; துப்புரவு தொழிலாளி கைது


விமான பணிப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை; துப்புரவு தொழிலாளி கைது
x
தினத்தந்தி 5 Sept 2023 12:15 AM IST (Updated: 5 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் விமான பணிப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கட்டிட துப்புரவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

அந்தேரியில் அடுக்குமாடி குடியிருப்பில் விமான பணிப்பெண் கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கட்டிட துப்புரவு தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

விமான பணிப்பெண்

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ரூபால் ஒக்ரே(வயது24). இவர் விமான பணிப்பெண் வேலையில் சேர கடந்த ஏப்ரல் மாதம் மும்பை வந்தார். அந்தேரி மரோல் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் சகோதரி மற்றும் அவரது ஆண் நண்பருடன் வசித்து வந்தார். ஏர் இந்தியா நிறுவனத்தில் பயிற்சி விமான பணிப்பெண்ணாகவும் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் ரூபால் ஒக்ரேவின் சகோதரி, ஆண் நண்பருடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார். வீட்டில் ரூபால் ஒக்ரே மட்டும் தனியாக இருந்தார். இந்தநிலையில் ருபால் ஒக்ரேக்கு அவரது குடும்பத்தினர் சொந்த ஊரில் இருந்து நேற்று முன்தினம் போன் செய்தனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.

கழுத்தை அறுத்து படுகொலை

இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் இது குறித்து மும்பையில் வசிக்கும் நண்பர் ஒருவரிடம் கூறினர். அவர் உடனடியாக வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை தட்டியும் ரூபால் ஒக்ரே கதவை திறக்கவில்லை. இதையடுத்து அவர் பவாய் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மாற்று சாவி மூலம் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது, அறையில் ரூபால் ஒக்ரே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜாவாடி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கட்டிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

துப்புரவு தொழிலாளி கைது

இதில், அந்த கட்டிடத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வரும் விக்ரம் அத்வால்(40) என்பவர் ரூபால் ஒக்ரே வீட்டுக்கு கடைசியாக வந்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விக்ரம் அத்வாலை கைது செய்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் விக்ரம் அத்வாலுக்கும், ரூபால் ஒக்ரேக்கும் ஏதோ பிரச்சினை தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விக்ரம் அத்வால் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. வீட்டில் தனியாக இருந்த பயிற்சி விமான பணிப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story