தமிழக வியாபாரியிடம் ரூ.26 லட்சம் வெளிநாட்டு பணம் அபேஸ்

மும்பை விமான நிலையத்தில் தமிழக வியாபாரியிடம் ரூ.26 லட்சம் வெளிநாட்டு பணத்தை அபேஸ் செய்த பெண் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
மும்பை,
மும்பை விமான நிலையத்தில் தமிழக வியாபாரியிடம் ரூ.26 லட்சம் வெளிநாட்டு பணத்தை அபேஸ் செய்த பெண் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
தமிழக வியாபாரி
தமிழ்நாட்டை சேர்ந்தவர் சோரப் சாஜித் உசேன்(வயது33). விலை உயர்ந்த கற்கள் வியாபாரம் செய்து வருகிறார். குறிப்பாக ஜோதிடர்கள், சாமியார்கள், முஸ்லிம் மதகுருக்களுக்கு விலை உயர்ந்த கற்களை சப்ளை செய்து வருகிறார். கடந்த வாரம் சோரப் சாஜித் உசேன் ராஜஸ்தானை சேர்ந்த வாடிக்கையாளருக்கு கற்கள் விற்பனை செய்தார். அதற்காக அவருக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலான 25 ஆயிரம் அமெரிக்க டாலர் கிடைத்தது. அவர் அந்த டாலர்களுடன் மும்பை வந்து டோங்கிரி பகுதியில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்தார்.
சம்பவத்தன்று வியாபாரியின் தோழிகள் 2 பேர் மும்பையில் இருந்து துபாய் சென்றனர். அவர்கள் துபாயில் செலவு செய்ய வியாபாரியிடம் பணம் கேட்டனர்.
ரூ.26 லட்சம் வெளிநாட்டு பணம்
இதற்காக அவர் தோழிகளுக்கு கொடுக்க ரூ.6 லட்சம் மதிப்பிலான 25 ஆயிரம் திராம் எடுத்து சென்றார். வியாபாரத்தில் கிடைத்த ரூ.20 லட்சம் அமெரிக்க டாலரையும் ஓட்டலில் வைத்து செல்ல மனமில்லாமல் எடுத்து சென்றார். இந்தநிலையில் இரவு 10.15 மணியளவில் வியாபாரி விமான நிலைய வாசல் பகுதியில் தோழிகளுக்காக காத்து நின்று கொண்டு இருந்தார். அப்போது, பெண் உள்பட 3 பேர் சுங்க அதிகாரிகள் என கூறி கொண்டு வியாபாரியிடம் பேசினர். பின்னர் அவர்கள் வியாபாரியிடம் நீங்கள் வெளிநாட்டு பணம் கடத்துவதாக எங்களுக்கு தகவல் வந்து உள்ளது. உங்களை சோதனையிடவேண்டும் என தெரிவித்தனர்.
பெண் கைது
அப்போது, திடீரென ஒருவர் வெளிநாட்டு பணம் இருந்த வியாபாரியின் பையை ஸ்கேன் எந்திரத்தில் சோதனை செய்ய வேண்டும் என கூறி எடுத்து சென்றார். அவர் வெகு நேரமாகியும் திரும்பிவரவில்லை. இதனால் சந்தேகமடைந்த வியாபாரி மற்ற 2 பேரிடமும் துருவி, துருவி கேள்விகளை கேட்க தொடங்கினார். அப்போது, அவர்களில் ஒருவர் நைசாக கூட்டத்துக்குள் புகுந்து மாயமானார். இதனால் உஷாரான வியாபாரி பெண்ணை மட்டும் பிடித்து சகார் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், அவர் கர்நாடகாவை சேர்ந்த சல்மா பானு என்பது தெரியவந்தது. அவர் கூட்டாளிகளுடன் சுங்க அதிகாரிகள் போல நடித்து தமிழக வியாபாரியிடம் ரூ.26 லட்சம் வெளிநாட்டு பணத்தை அபேஸ் செய்தது தெரியவந்தது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெளிநாட்டு பணத்துடன் தப்பியோடிய பெண்ணின் கூட்டாளிகள் இருவரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.






