ஜல்னாவில் பணத்திற்காக வாலிபரை திருமணம் செய்து மோசடி- 2 குழந்தைகளின் தாய் கைது


ஜல்னாவில் பணத்திற்காக வாலிபரை திருமணம் செய்து மோசடி- 2 குழந்தைகளின் தாய் கைது
x

பணத்திற்காக வாலிபரை திருமணம் செய்து மோசடி செய்த 2 குழந்தைகளின் தாயை போலீசார் கைது செய்தனர்.

ஜல்னா,

பணத்திற்காக வாலிபரை திருமணம் செய்து மோசடி செய்த 2 குழந்தைகளின் தாயை போலீசார் கைது செய்தனர்.

ரூ.2 லட்சம் பணம்

ஜல்னா மாவட்டத்தில் உள்ள சோயகான் கிராமத்தை சேர்ந்தவர் ராவ்சாகேப் சகானே(வயது25). இவர் நீண்ட நாட்களாக திருமணத்திற்காக பெண் தேடிவந்தார். பல பெண்களை பார்த்தும் அவருக்கு திருமணம் கைகூடவில்லை.

இந்தநிலையில் தான் ரமேஷ் சேல்கே என்ற திருமண தரகரின் அறிமுகம் ராவ்சாகேப் சகானேவுக்கு கிடைத்தது. அவர் தனக்கு தெரிந்த அழகிய பெண் ஒருவர் இருப்பதாக கூறி சோனி வான்கடே என்ற பெண்ணை ராவ்சாகேப் சகானேவுக்கு அறிமுகப்படுத்தினார்.

இருப்பினும் அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால் தனக்கு ரூ.2 லட்சம் தரவேண்டும் என்று ரமேஷ் சேல்கே தெரிவித்தார்.

திருமணம் கைகூடாத விரக்தியில் இருந்த ராவ்சாகேப் சகானே அவர் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளுக்கும் தலையட்டினார். அவர் கேட்ட பணத்தையும் கொடுத்தார்.

நடவடிக்கையில் சந்தேகம்

இதைத்தொடர்ந்து கடந்த ஜூன் 24-ந் தேதி ராவ்சாகேப் சகானே, சோனி வான்கடே இருவரும் சோயகான் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில் திருமணம் ஆன நாளில் இருந்தே சோனி வான்கடேவின் நடவடிக்கையில் ராவ்சாகேப் சகானேவுக்கு சந்தேகம் இருந்து வந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் சோனி வான்கடே தான் தாய் வீட்டிற்கு செல்ல விரும்புவதாக தெரிவித்தார். ராவ்சாகேப் சகானே உடன் வருவதாக தெரிவித்தபோது அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

இதையடுத்து சோனி வான்கடே தனியாக பெற்றோர் வீட்டிற்கு அனுப்ப கணவர் ஒப்புக்கொண்டார். இதற்காக பஸ் நிலையத்திற்கு அவரை கொண்டு சென்று விட்டார்.

போலீசில் புகார்

அப்போது பஸ் நிலையத்தில் காத்துக்கொண்டு இருந்த ஒருவர் அவரை அழைத்து செல்வதை கண்டார். இதனால் தான் ஏமாற்றப்படுவதாக உணர்ந்த ராவ்சாகேப் சகானே போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரின் படி சோனி வான்கடேவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதும், பஸ் நிலையத்தில் அவருக்காக காத்திருந்து அழைத்து சென்றவர் அவரின் கணவர் என்பதும் தெரியவந்தது.

மேலும் அவர்கள் சேர்ந்து ராவ்சாகேப் சகானேவை போலி திருமணம் செய்து பணம் பறிக்க முயற்சி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சோனி வான்கடேவை கைது செய்தனர்.

மேலும் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story