அண்ணன், அண்ணி தற்கொலையில் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி: கை விரலை வெட்டி வீடியோ வெளியிட்டவரால் பரபரப்பு - எம்.பி. மீது குற்றச்சாட்டு


தினத்தந்தி 19 Aug 2023 6:45 PM GMT (Updated: 19 Aug 2023 6:47 PM GMT)

அண்ணன், அண்ணி தற்கொலை சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கைவிரலை வெட்டியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் எம்.பி. ஒருவர் மீது குற்றம்சாட்டி உள்ளார்.

மும்பை,

அண்ணன், அண்ணி தற்கொலை சம்பவத்தில் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கைவிரலை வெட்டியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் எம்.பி. ஒருவர் மீது குற்றம்சாட்டி உள்ளார்.

தம்பதி தற்கொலை

தானே மாவட்டம் உல்லாஸ்நகர், ஆல்சேபாடாவை சேர்ந்தவர் நந்தகுமார் (வயது45). இவரது மனைவி ஊர்மிளா (44). இவர்களுக்கு 19 வயது மற்றும் 14 வயதில் பிள்ளைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி கணவன், மனைவி 2 பேரும் தங்களின் பங்களா வீட்டின் மொட்டை மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். தற்கொலை செய்து கொண்ட 2 பேரும் தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து வீடியோ வெளியிட்டு இருந்தனர். மேலும் நந்தகுமாரின் பேன்ட் பாக்கெட்டில் இருந்து கடிதம் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதிலும் அவர் தற்கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களை எழுதி வைத்து இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து விட்டல்வாடி போலீசார் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.

கைவிரலை வெட்டிய தம்பி

இந்தநிலையில் சம்பவம் நடந்து 2 வாரங்கள் கடந்த பிறகும், நந்தகுமார், ஊர்மிளா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காததால் நந்தகுமாரின் தம்பி தனஞ்செய் நம்பிக்கை இழந்தார். அவர் நேற்று முன்தினம் சத்தாரா மாவட்டம் பால்தன் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து அருகில் உள்ள கோழி பண்ணைக்கு சென்றார். அங்கு அவர் அண்ணன், அண்ணியின் தற்கொலைக்கு நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து அவரது ஆள்காட்டி விரலை துண்டாக வெட்டிக்கொண்டார். மேலும் அந்த காட்சிகளை வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்றினார். வீடியோவில் அவர், " எனது அண்ணனும், அண்ணியும் தற்கொலை செய்துவிட்டனர். 20 நாட்கள் ஆகியும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் எம்.பி. ஒருவர் சம்மந்தப்பட்டுள்ளார். எனது அண்ணன் அவரது பெயரை வீடியோவில் கூறியுள்ளார். ஆனால் மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த கூடாது என்று தொடர்ந்த அழுத்தம் கொடுக்கின்றனர்.

ஓட்டுப்போட்ட விரல்

எனது குடும்பத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக விரலை வெட்டிக்கொண்டேன். மோடி அரசுக்கு எனது விரலை பரிசாக அளிக்கிறேன். அந்த விரலில் தான் இந்த அரசுக்கு நான் ஓட்டுப்போட்டேன். மாநில அரசில் தேவேந்திர பட்னாவிஸ், சம்புராஜ் தேசாய் (சத்தாரா பொறுப்பு மந்திரி) இருக்கும் போது இது எப்படி நடக்கலாம். தற்கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களை எனது அண்ணன் கூறிவிட்டார். நடவடிக்கை எடுக்க எவ்வளவு காலம் ஆகும்?. எனவே அரசுக்கு எனது ஒரு பாகத்தை கொடுத்துவிட்டேன். அவர்கள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்புகிறேன். போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் எனது உடலின் ஒவ்வொரு பாகமாக வெட்டி அரசுக்கு அனுப்புவேன்" என்றார். இந்த சம்பவத்தை அடுத்து, தம்பதி தற்கொலை சம்பவம் குறித்து வேகமாக விசாரணை நடத்த முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். மேலும் வெட்டிய விரலை மீண்டும் அறுவைசிகிச்சை மூலம் தனஞ்செய்க்கு பொருத்தவும் நடவடிக்கை எடுக்க புனே ரூபி கிளினிக் டாக்டர்களுக்கு ஏக்நாத் ஷிண்டே அறிவுறுத்தி உள்ளார்.


Next Story