கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை பதவி நீக்க வேண்டும்- பிரதமருக்கு, உதயன்ராஜே எம்.பி. கடிதம்


கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியை பதவி நீக்க வேண்டும்- பிரதமருக்கு, உதயன்ராஜே எம்.பி. கடிதம்
x
தினத்தந்தி 26 Nov 2022 12:15 AM IST (Updated: 26 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பகத்சிங் கோஷ்யாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. உதயன்ராஜே போசலே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

புனே,

சத்ரபதி சிவாஜி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பகத்சிங் கோஷ்யாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜனதா எம்.பி. உதயன்ராஜே போசலே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

எதிர்ப்பு குரல்

மராட்டிய கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி மற்றும் பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சுதன்சு திரிவேதி ஆகியோர் கூறிய கருத்து கடும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியது. இவர்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கடுமையாக குரல் எழுப்பி வருகின்றன.

இதேபோல சத்ரபதி சிவாஜியின் வழித்தோன்றலான எம்.பி. உதயன்ராஜே போசலேவும் இவர்களின் கருத்துக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

இந்த பிரச்சினை தொடர்பாக அவர் ஜனாதிபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆகியோருக்கு எழுதிய கடிதத்தையும் தனது டுவிட்டர் பக்கத்தல் வெளியிட்டுள்ளார்.

பதவி நீக்கம்

அதில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், "சிவாஜி மகாராஜாவின் ராய்காட் கோட்டைக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றது, சிவாஜி மகாராஜாவின் முத்திரையுடன் கூடிய புதிய கடற்படை கொடியை அறிமுகப்படுத்தியது போன்ற நடவடிக்கைகள் சத்ரபதி சிவாஜி மீதான அவரது அர்ப்பணிப்பை நிரூபிக்கிறது.

ஆனால் மராட்டியத்தின் கவர்னர் வெளியிடும் அறிக்கைகள் சத்ரபதி சிவாஜி மகாராஜா மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதைக்கு முற்றிலும் முரணானதாக தோன்றுகிறது. எனவே அவரை அந்த பதவியில் இருந்து நீக்குவது தான் பொருத்தமானதாக இருக்கும்" என்று தெரிவித்துளளார்.

வெட்கமாக இல்லையா?

மேலும் சுதன்சு திரிவேதியை கடுமையாக சாடிய அவர், " நாட்டில் உள்ள அனைவரும் முகலாய ஆட்சிக்கு அடிபணிந்தபோது சத்ரபதி சிவாஜி மகாராஜா மட்டுமே அவர்களுக்கு எதிராக நின்றார்.

இதுபோன்ற அறிக்கையை வெளியிடுவதற்கு அவர்களுக்கே வெட்கமாக இல்லையா? எந்த அடிப்படையில் இதுபோன்ற கருத்துகளை அவர்கள் வெளியிடுகின்றனர். சுதன்சு திரிவேதியை பா.ஜனதா கட்சியில் இருந்து நீக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story