கர்ப்பிணிக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன்


கர்ப்பிணிக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன்
x

கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட கர்ப்பிணிக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

கணவரை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட கர்ப்பிணிக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. கர்ப்பிணியையும், அவர் வயிற்றில் வளரும் கருவையும் பாதுகாப்பது நீதிமன்றத்தில் கடமை என ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

கணவர் தற்கொலை

புனேயில் உள்ள யவாத் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவரது மனைவி சோன்வானே. ராகுல் கடந்த ஏப்ரல் மாதம் திடீரென தற்கொலை செய்துகொண்டார்.

இதை தொடர்ந்து ராகுலின் தந்தை யாவத் போலீஸ் நிலையத்தில் தனது மருமகள் அஸ்வினி சோன்வானே மீது புகார் ஒன்றை கொடுத்தார்.

இதில், "அஸ்வினி சோன்வானே எனது மகன் ராகுலுக்கு துரோகம் செய்துவிட்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தனது மகனுடன் சண்டை போட்டுவிட்டு பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். அவரின் தற்கொலைக்கு அஸ்வினி சோன்வானே தான் காரணம்" என புகாரில் கூறியிருந்தார்.

இதன்பேரில் போலீசார் அஸ்வினி சோன்வானே மீது இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 306(தற்கொலைக்கு தூண்டுதல்) கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

முன்ஜாமீன் மனு

இந்த நிலையில் அஸ்வினி சோன்வானே இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டை நாடினார்.

இதற்காக அவர் தாக்கல் செய்த மனுவில், "என்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளில் எந்த உண்மை தன்மையும் இல்லை. எனது மாமியார் என்னிடம் வரதட்சனை கேட்டு கொடுமை படுத்தினார். இதன் காரணமாக எனது கணவர் மன அழுத்தத்தில் இருந்தார்.

மேலும் எனது கணவருடனான எனது உறவு சுமூகமானதாக இருந்தது. சம்பவம் நடத்தபோது நான் 3 மாத கர்ப்பிணியாக இருந்தேன்" என்றார்.

இந்த முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி மிலிந்த் ஜாதவ் தனது தீர்ப்பில் கூறியதாவது:-

நீதிமன்றத்தின் கடமை

குற்றம் சாட்டப்பட்ட பெண் மீது பதிவு செய்யப்பட்ட குற்றம் தீவிரமானது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை அவருக்கு தண்டனை கிடைக்கும். இருப்பினும் மனுதாரர் 25 வார கர்ப்பிணி, கருவை சுமந்துள்ளார் என்ற உண்மையை பார்க்கவேண்டும். இந்த சமயத்தில் மனுதாரரும், கருவும் பாதுகாக்கப்படுவதையும், மனுதாரர் எந்த ஒரு அழுத்தத்திற்கும் உட்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்வது நீதிமன்றத்தின் கடமையாகும்.

இந்த நிலையில் மனுதாரர் தொடர்ந்து ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டி இருக்கலாம். மேலும் பிரசவத்திற்கு பிறகு கவனிப்பும், ஓய்வும் தேவைப்படலாம். எனவே ரூ.25 ஆயிரம் தனிப்பட்ட பிணையுடன் அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுகிறது.

இருப்பினும் அந்த பெண் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story