மும்பையில் கொட்டித்தீர்த்த மழையால் சாலை, தண்டவாளங்கள் மூழ்கின- இயல்பு வாழ்க்கை பாதிப்பு


மும்பையில் கொட்டித்தீர்த்த மழையால் சாலை, தண்டவாளங்கள் மூழ்கின- இயல்பு வாழ்க்கை பாதிப்பு
x

மும்பையில் 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் சாலை, தண்டவாளங்கள் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மும்பை,

மும்பையில் 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் சாலை, தண்டவாளங்கள் மூழ்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

கொட்டித்தீர்த்த மழை

மராட்டியத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி பருவ மழைக்காலம் தொடங்கியது. எனினும் ஓரிரு நாட்கள் மட்டுமே பலத்த மழை பெய்தது. அரசியல் பரபரப்பால் மழை ஓய்ந்ததோ என்னவோ?, தற்போது அரசியல் ஆட்டம் தணிந்த நிலையில் அடை மழை பெய்ய தொடங்கி உள்ளது.

குறிப்பாக மாநில தலைநகர் மும்பையில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இன்றும் ஓய்வின்றி மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக தாதர் இந்து மாதா, கிங்சர்க்கிள், சயான், செம்பூர், காட்கோபர், குர்லா, திலக்நகர், பரேல் டி.டி. சக்கர் பஞ்சாயத் சவுக், வடலா, டெம்பி பாலம் கலாநகர் - தாராவி டி ஜங்ஷன் சாலை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கியது.

பல சாலைகளில் 2 அடிக்கு மேல் வெள்ளம் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பஸ் போக்குவரத்து திருப்பி விடப்பட்டது. அந்தேரி சப்வே வழக்கம் போல மழையில் மூழ்கியது.

தாராவி, காட்கோபர், அந்தேரி, பவாய், பரேல், மலாடு, கோரேகாவ் உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்பு பகுதியிலும் மழைநீர் தேங்கியிருந்தது.

ரெயில் போக்குவரத்து பாதிப்பு

இதேபோல சாயன், குர்லா, திலக் நகர், வடலா, மாட்டுங்கா, மான்கூர்டு, பன்வெல், கண்டேஷ்வர் போன்ற இடங்களில் தண்டவாளங்கள் மூழ்கின.

இதன் காரணமாக மத்திய, துறைமுகம் மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. மின்சார ரெயில்கள் ஊர்ந்து சென்றன. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

கனமழை காரணமாக தலைநகரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மோசமான அளவில் பாதிக்கப்பட்டது.

இருப்பினும் பலத்த மழையால் நகரில் அமலில் உள்ள 10 சதவீத குடிநீர் வெட்டு பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர்.

மும்பையில் இன்று பகல் 12 மணி வரையுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் புறநகரில் 12.4 செ.மீ. மழையும், நகரில் 11.7 செ.மீ. மழையும் பதிவானது. இதற்கிடையே மும்பை புறநகரில் இன்று காலை 8 மணி முதல் மாலை 5.30 வரை மட்டும் 15 செ.மீ. மழையளவு பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

அடுத்த 9-ந் தேதி வரை மும்பையில் கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

நவிமும்பையில் 24 செ.மீ. மழை

மும்பையை அடுத்த தானே, நவிமும்பை, பால்கர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. மும்ராவில் குடிசைப்பகுதியில் சுவர் இடிந்ததால் 17 குடும்பத்தினர் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அருகில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். கல்யாண் அனுமன் நகரில் மலையில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்தன. எனினும் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அதிகப்பட்சமாக நவிமும்பை கோபர் கிரைனேயில் 24.2 செ.மீ. மழையும், ஜூய் நகரில் 23.6 செ.மீ., டோம்பிவிலி 19.2 செ.மீ., பால்கர் 10 செ.மீ. மழையும் பெய்து உள்ளது.

27 கிராமங்கள் துண்டிப்பு

இதுதவிர ரத்னகிரி, ராய்காட், சிந்துதுர்க், அமராவதி, சத்தாரா, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது. மும்பை- கோவா நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிப்லுனில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சிந்துதுர்க் மாவட்டம் குடால் பகுதியில் நிர்மலா நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 27 கிராமங்கள் துண்டிக்கப்பட்டது. ராய்காட் மாவட்டம் மகாடு சயாத்ரி நதியில் நீர் மட்டம் அதிகரித்ததால் சுமார் ஆயிரம் குடும்பங்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர்.

மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளுக்கு தயாராக இருக்குமாறு மாவட்ட நிர்வாகங்களுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.

----------------


Next Story