திருடிய பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றி லண்டன் தப்பி செல்ல முயன்ற கணவன்- மனைவி கைது - குஜராத்தை சேர்ந்தவர்கள்

திருடிய பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றி லண்டன் தப்பி செல்ல முயன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர். இவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
மும்பை,
திருடிய பாஸ்போர்ட்டில் பெயரை மாற்றி லண்டன் தப்பி செல்ல முயன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர். இவர்கள் குஜராத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
தேடப்படும் குற்றவாளிகள்
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் அபுதாபிக்கு விமானம் செல்ல தயார் நிலையில் நின்றது. அப்போது அந்த விமானத்தில் பயணம் செய்ய தம்பதி வந்திருந்தனர். அவர்களின் பாஸ்போர்ட், விசா போன்றவை குடியுரிமை அதிகாரிகள் சோதனை போட்டனர். இதில் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்தவரின் பாஸ்போர்ட்டை திருடி பெயர் மாற்றம் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் வெளிநாட்டு பாஸ்போர்ட் பதிவு அலுவலகம் தம்பதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தம்பதியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
தம்பதி கைது
போலீசார் தம்பதியிடம் நடத்திய விசாரணையில் குஜராத் மாநிலம் துவராகாவை சேர்ந்த மால்தேபாய் (வயது30) மற்றும் அவரது மனைவி ஹிரால்(28) என தெரியவந்தது. இவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு இந்திய பாஸ்போர்ட்டில் லண்டன் சென்று அங்கு வேலை பார்த்து வந்தனர். பின்னர் குஜராத் ஏஜெண்ட் உதவியுடன் போர்ச்சுக்கல் சென்று அங்கு பாஸ்போர்டை திருடி தங்களின் பெயரை மாற்றி உள்ளனர். இதனை பயன்படுத்தி கடந்த மாதம் 2-ந்தேதி இந்தியாவிற்கு வந்தனர். இதே பாஸ்போர்ட்டை பயன்படுத்தி தற்போது லண்டன் செல்ல முயன்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியை கைது செய்தனர்.






