திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையால் அசம்பாவிதம் நடந்தால் மாநகராட்சி தான் பொறுப்பு- ஐகோர்ட்டு திட்டவட்டம்


திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையால் அசம்பாவிதம் நடந்தால் மாநகராட்சி தான் பொறுப்பு- ஐகோர்ட்டு திட்டவட்டம்
x
தினத்தந்தி 7 Dec 2022 6:45 PM GMT (Updated: 7 Dec 2022 6:46 PM GMT)

மும்பையில் திறந்துகிடக்கும் பாதாள சாக்கடைகளால் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு மும்பை மாநகராட்சி தான் பொறுப்பு என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது.

மும்பை,

மும்பையில் திறந்துகிடக்கும் பாதாள சாக்கடைகளால் ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்தால் அதற்கு மும்பை மாநகராட்சி தான் பொறுப்பு என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது.

போர்கால அடிப்படையில் பணி

மும்பையில் உள்ள பல்லாங்குழி சாலைகளும், திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடிகளும் அடிக்கடி பெரும் விபத்துகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உயிர் சேதமும் ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை முன்னிறுத்தி மும்பை ஐகோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்கை தலைமை நீதிபதி தீபங்கர் தத்தா மற்றும் நீதிபதி அபய் அகுஜா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது மும்பை மாநகராட்சி சார்பில் ஆஜரான வக்கீல் அனில் சாகரே கூறுகையில், "திறந்து கிடக்கும் பாதாள சாக்கடை மூடிகள் தொடர்பான பிரச்சினை போர்க்கால அடிப்படையில் தீர்க்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற அனைத்து பாதாள சாக்கடைகளையும் மூடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது" என்று தெரிவித்தார்.

மாநகராட்சி தான் பொறுப்பு

இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:-

நீங்கள்(மும்பை மாநகராட்சி) நன்றாக வேலை செய்கிறீர்கள். ஆனால் இந்த வேலைகள் முடிவதற்குள் ஏதேனும் கசப்பான சம்பவங்கள் நடந்தால் அதற்கு மும்பை மாநகராட்சி தான் காரணமாக இருக்கும்.

திறந்து கிடக்கும் பாதாள சாக்கடைகளில் யாராவது விழுந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட நபரிடம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடர நாங்கள் கேட்டுக்கொண்டு இருக்க மாட்டோம். மாநகராட்சி அதிகாரிகள் தான் பொறுப்பு என்று கூறுவோம்.

நவீன அறிவியல்

பாதாள சாக்கடை மூடி அகற்றப்படும் சம்பவத்தில் மும்பை மாநகராட்சி நவீன அறிவியல், தொழில்நுட்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப காலத்தில் நாம் புதிதாக எதையும் சிந்திக்க முடியாதா? யாராவது பாதாள சாக்கடை மூடியில் தொட்டால் கூட உங்களுக்கு தகவல் வரும் வகையில் மும்பை மாநகராட்சி ஏதாவது ஒன்றை திட்டமிடவேண்டும். ஏன் இதற்காக சென்சார் ஒன்றை கொண்டுவரக்கூடாது?

இதேபோல பாதாள சாக்கடை மூடிகளுக்கு கீழே இரும்பு கிரில்களை பயன்படுத்தவும், இந்த அமர்வு பரிந்துரைக்கிறது.

இதற்கு மும்பை மாநகராட்சி ஒரு தீர்வை வழங்க வேண்டும். இதற்கு சரியான தீர்வு என்னவாக இருக்கும் என்பதை நீங்கள் தான் கூறவேண்டும். எங்களுக்கு நிரந்தர தீர்வு தேவையாகும்.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 19-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story