'பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க முடியாது என்று பிரதமர் மோடியிடம் தெளிவுப்படுத்தினேன்'- சுயசரிதையில், சரத்பவார் தகவல்

2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை அடுத்து பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தெளிவுபடுத்தினேன் என சுயசரிதை புத்தகத்தில் சரத்பவார் கூறினார்.
மும்பை,
2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை அடுத்து பா.ஜனதாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியமைக்க முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தெளிவுபடுத்தினேன் என சுயசரிதை புத்தகத்தில் சரத்பவார் கூறினார்.
பா.ஜனதாவின் ஆசை
தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் தனது புதுப்பிக்கப்பட்ட சுயசரிதையை நேற்று முன்தினம் வெளியிட்டார். இதில் 2019-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு பிறகு தனது கட்சியுடன் பா.ஜனதா கூட்டணி வைத்து ஆட்சி அமைக்க விரும்பியதாக தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
மராட்டியத்தில் 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் புதிய அரசை அமைப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஏதேனும் வாய்ப்பு உள்ளதா என்று பா.ஜனதா ஆராய தொடங்கியது. ஆனால் நான் அப்படி செய்யவில்லை. இதற்கு பா.ஜனதா ஆசை பட்டதே தவிர, முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. ஆனால் இரு கட்சிகளில் இருந்து சில தலைவர்களிடையே மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்தன.
மோடியுடன் சந்திப்பு
இருப்பினும் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு விருப்பம் இல்லாததால் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்றும் முடிவு செய்தோம். இதை பா.ஜனதாவிடம் தெளிவாக கூறவேண்டி இருந்தது. 2019-ம் ஆண்டு நவம்பர் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தேன்.
அப்போது அவரிடம், "நான் பிரதமர் மோடியிடம், பா.ஜனதாவுக்கும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இடையே அரசியல் தொடர்பு இருக்க முடியாது என்று மிக தெளிவாக சொன்னேன். ஆனால் நான் இதை சொல்லும்போது பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க விரும்பும் தலைவர்களில் ஒரு பகுதியினர் எனது கட்சியில் இருந்தனர் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.






