நாசிக் மாவட்டத்தில் வெங்காய வியாபாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தம்; மந்திரி அப்துல் சத்தார் எச்சரிக்கை
நாசிக் மாவட்டத்தில் வெங்காய ஏலத்தை நிறுத்தி வியாபாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து மந்திரி அப்துல் சத்தார் எச்சரிக்கை விடுத்தார்.
நாசிக்,
நாசிக் மாவட்டத்தில் வெங்காய ஏலத்தை நிறுத்தி வியாபாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து மந்திரி அப்துல் சத்தார் எச்சரிக்கை விடுத்தார்.
போராட்டம் வாபஸ்
வெங்காய விலை அதிகரித்ததை அடுத்து ஏற்றுமதியை கட்டுப்படுத்துவதற்காக கடந்த ஆண்டு மத்திய அரசு வெங்காயத்தின் ஏற்றுமதி வரியை 40 சதவீதமாக உயர்த்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 20-ந் தேதி நாசிக் மாவட்டத்தில் வெங்காய வியாபாரிகள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் வெங்காய ஏலத்தையும் நிறுத்தினர். இதையடுத்து நாசிக் மாவட்டத்தை சேர்ந்த மத்திய மந்திரி பாரதி பவார், நாசிக் மாவட்ட வெங்காய வியாபாரிகள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். மேலும் வெங்காயத்தை குவிண்டாலுக்கு ரூ.2,410-க்கு அரசு வாங்கிக்கொள்ளும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் மத்திய மந்திரி கூறியபடி செய்யவில்லை என வெங்காய வியாபாரிகள் குற்றம் சாட்டி வந்தனர்.
மீண்டும் போராட்டம்
இந்த நிலையில் நேற்று மீண்டும் நாசிக் மாவட்டத்தில் உள்ள முக்கிய சந்தைகளில் வெங்காய ஏலத்தை நிறுத்தி விவசாயிகள் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தனர். மேலும் நாசிக் மாவட்ட வெங்காய வியாபாரிகள் சங்க அதிகாரி கூறியதாவது:- வெங்காயத்தின் மீதான ஏற்றுமதி வரியை அதிகரித்ததற்கு எதிராக மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகளிலும் வெங்காய ஏலத்தை காலவரையின்றி நிறுத்த முடிவு செய்துள்ளோம். மத்திய அரசின் இந்த முடிவு வெங்காய ஏற்றுமதியை கடினமாக்குவது மட்டும் இன்றி, போக்குவரத்து செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும். எங்கள் கோரிக்கைகளுக்கு தீர்வு காண 19-ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்தோம். ஆனால் எங்கள் கோரிக்கைகள் இன்னும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை இவ்வாறு அவர் கூறினார்.
மந்திரி எச்சரிக்கை
இதுகுறித்து மராட்டிய மந்திரி அப்துல் சத்தார் கூறுகையில், " வெங்காய வியாபாரிகள் வேலைநிறுத்தம் சரியில்லை. ஒத்துழைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் துறைகளின் செயலாளர்கள் விதிப்படி எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்போம். நாசிக் மாவட்ட கலெக்டர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்" என்றார்.