முன்னாள் மேயரை கைது செய்ய இடைக்கால தடை - செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு


முன்னாள் மேயரை கைது செய்ய இடைக்கால தடை - செசன்ஸ் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 12 Aug 2023 8:15 PM GMT (Updated: 12 Aug 2023 8:16 PM GMT)

கொரோனா பரவலின் போது முககவசம், ‘பாடிபேக்' வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கரை கைது செய்ய செசன்ஸ் கோர்ட்டு இடைக்கால தடைவிதித்து உள்ளது.

மும்பை,

கொரோனா பரவலின் போது முககவசம், 'பாடிபேக்' வாங்கியதில் நடந்த மோசடி தொடர்பான வழக்கில் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கரை கைது செய்ய செசன்ஸ் கோர்ட்டு இடைக்கால தடைவிதித்து உள்ளது.

மோசடி வழக்கு

கொரோனா பரவலின் போது மும்பை மாநகராட்சி அதிக விலை கொடுத்து இறந்த நோயாளிகளை வைப்பதற்கான 'பாடி பேக்', முககவசம் போன்றவற்றை வாங்கி மோசடியில் ஈடுபட்டதாக பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா போலீசில் புகார் அளித்தார். இந்த புகார் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் மேயர் கிஷோரி பெட்னேக்கர், மாநகராட்சி அதிகாரிகள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கைதுக்கு இடைக்கால தடை

இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கிஷோரி பெட்னேக்கர் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், " அடுத்த சில நாட்களில் கிஷோரி பெட்னேக்கரை பொருளாதார குற்றப்பிரிவு விசாரணைக்கு அழைக்கலாம் என பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளன. எனவே போலீசார் கைது செய்யலாம் என்பதால் மனு தாரர் முன்ஜாமீன் கேட்டு வந்துள்ளார். அரசியல் காழ்புணர்ச்சி, தவறான நோக்கத்துடன் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கிரித் சோமையா அவர் சார்ந்த கட்சிக்காரர்களை தவிர மற்றவர்கள் மீது புகார் அளிப்பதை வாடிக்கையாக வைத்து உள்ளார் " என கூறப்பட்டு இருந்தது. கிஷோரி பெட்னேக்கர் மனு தொடர்பாக பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என போலீசார் கேட்டனர். இதையடுத்து அடுத்த விசாரணை வரை கிஷோரி பெட்னேக்கர் மீது கைது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க கூடாது என போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் மனு மீதான விசாரணை வருகிற 24-ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.


Next Story