அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மந்திரி ஹசன் முஷ்ரிப்பை கைது செய்ய இடைக்கால தடை

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஹசன் முஷ்ரிப்பை கைது செய்ய மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடைவிதித்து உள்ளது.
மும்பை,
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஹசன் முஷ்ரிப்பை கைது செய்ய மும்பை ஐகோர்ட்டு இடைக்கால தடைவிதித்து உள்ளது.
முன்னாள் மந்திரி மீது வழக்கு
தேசியவாத காங்கிரஸ் முன்னாள் மந்திரி ஹசன் முஷ்ரிப். கோலாப்பூரில் உள்ள ககல் தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் தொடர்பான நிறுவனங்களில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஹசன் முஷ்ரிப் தாக்கல் செய்த மனுவை சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது. எனவே அவர் முன் ஜாமீன் கேட்டு மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.
இடைக்கால தடை
மனுவில், "பா.ஜனதா முன்னாள் எம்.பி. கிரித் சோமையா கொடுத்த அழுத்தம் காரணமாக அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக ஹசன் முஷ்ரிப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனினும் அவர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். எனவே அமலாக்கத்துறை அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய தேவையில்லை" என கூறப்பட்டு இருந்தது.
மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி அனுஜா பிரபுதேசாய் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஹசன் முஷ்ரிப் மனுவுக்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் கேட்கப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதி, வரும் 27-ந் தேதி வரை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஹசன் முஷ்ரிப்பை கைது செய்ய இடைக்கால தடை விதித்தார்.






