தாராவி மறுசீரமைப்பு திட்டத்துடன் மாகிம் இயற்கை பூங்கா இணைப்பட்டு உள்ளதா?- விளக்கம் அளிக்க அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தாராவி மறுசீரமைப்பு திட்டத்துடன் மாகிம் இயற்கை பூங்கா இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்க மாநில அரசு, எஸ்.ஆர்.ஏ.வுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மும்பை,
தாராவி மறுசீரமைப்பு திட்டத்துடன் மாகிம் இயற்கை பூங்கா இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்க மாநில அரசு, எஸ்.ஆர்.ஏ.வுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாகிம் இயற்கை பார்க்
தாராவி மறுசீரமைப்பு திட்டத்துக்கான டெண்டரை சமீபத்தில் அதானி நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இந்தநிலையில் வனசக்தி என்ற தொண்டு நிறுவனம் மும்பை ஐகோர்ட்டில் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. அந்த மனுவில், தாராவி மறுசீரமைப்பு திட்டத்துடன் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான 27 ஏக்கர் பரப்பளவு உள்ள 'மாகிம் நேச்சர் பார்க்' (மாகிம் இயற்கை பூங்கா) இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாகிம் நேச்சர் பார்க்கை தாராவி சீரமைப்பு திட்டத்துடன் இணைக்க கூடாது, அதுதொடர்பான விவரங்கள் திட்ட ஆவணங்களில் இருந்து அழிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
விளக்கம் அளிக்க உத்தரவு
நேற்று இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி திபான்கர் தத்தா, நீதிபதி அபய் அகுஜா அடங்கிய அமர்வு முன் நடந்தது. அப்போது குடிசை சீரமைப்பு ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல் தாராவி குடிசை சீரமைப்பு திட்டத்துடன் மாகிம் இயற்கை பூங்கா இணைக்கப்படவில்லை என தெரிவித்தார்.
எனினும் நீதிபதிகள் தாராவி சீரமைப்பு திட்டத்துடன் மாகிம் இயற்கை பூங்கா இணைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விளக்கம் அளித்து அடுத்த மாதம் 2-ந் தேதிக்குள் மனு தாக்கல் செய்ய மாநில அரசு மற்றும் குடிசை சீரமைப்பு ஆணையத்துக்கு (எஸ்.ஆர்.ஏ.) உத்தரவிட்டனர்.






