கூட்டுறவு துறை அஜித்பவார் அணிக்கு ஒதுக்கீடு செய்தது பா.ஜனதாவின் 'வாஷிங் மெஷின்' திட்டத்தின் பகுதியா? - தேசியவாத காங்கிரஸ் கிண்டல்


கூட்டுறவு துறை அஜித்பவார் அணிக்கு ஒதுக்கீடு செய்தது பா.ஜனதாவின் வாஷிங் மெஷின் திட்டத்தின் பகுதியா? - தேசியவாத காங்கிரஸ் கிண்டல்
x
தினத்தந்தி 14 July 2023 7:45 PM GMT (Updated: 14 July 2023 7:45 PM GMT)

கூட்டுறவு துறையை அஜித்பவார் அணிக்கு ஒதுக்கியது வாஷிங் மெஷின் திட்டத்தின் ஒரு பகுதியா? என தேசியவாத காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.

மும்பை,

கூட்டுறவு துறையை அஜித்பவார் அணிக்கு ஒதுக்கியது வாஷிங் மெஷின் திட்டத்தின் ஒரு பகுதியா? என தேசியவாத காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.

இலாகா ஒதுக்கீடு

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் மற்றும் அவரது கட்சியை சேர்ந்த 8 பேர் கடந்த 2-ந் தேதி பா.ஜனதா கூட்டணி அரசின் மந்திரி சபையில் இணைந்தனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் 2-ஆக பிளவுபட்டுள்ளது. இந்த நிலையில் துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ள அஜித்பவார் உள்ளிட்ட 9 மந்திரிகளுக்கும் நேற்று இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. இதில் அஜித்பவாருக்கு நிதி துறையும், தனஞ்செய் முண்டேவுக்கு வேளாண் துறையும், திலீப் வால்சே பாட்டீலுக்கு கூட்டுறவு துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஊழல் புரிந்ததாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் அந்த கட்சியை சேர்ந்த ஒருவருக்கே கூட்டுறவு துறை ஒதுக்கப்பட்டு இருப்பதை சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி கிண்டல் செய்துள்ளது.

பல்வேறு கேள்விகள்

இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் கிளைட் கிராஸ்டோ கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டிய நிலையில் கூட்டுறவு இலாகா ஒதுக்கீடு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இதற்கு பா.ஜனதா பதில் அளிக்க வேண்டும். பா.ஜனதா கட்சியினர் அஜித்பவார் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது அவருக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் அழுத்தம் கொடுப்பதற்காகவா? அல்லது இதுவும் பா.ஜனதா வாஷிங் மெஷின் திட்டத்தின் ஒரு பகுதியா? முக்கியமான கூட்டுறவு துறையில் நடந்ததாக கூறப்படும் ஊழல்கள் மற்றும் மோசடிகளை பா.ஜனதா அங்கீகரிக்கிறதா? இவ்வாறு அவர் கூறியுள்ளார். அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற விசாரணை அமைப்புகள் மூலமாக விசாரணைக்கு உள்ளாக்கப்படும் எதிர்க்கட்சி தலைவர்கள் பா.ஜனதாவில் சேர்ந்த பிறகு அவர்கள் தூய்மையானவர்களாக மாறிவிடுவதாக குற்றம்சாட்டும் எதிர்க்கட்சிகள், பா.ஜனதாவை வாஷிங் மெஷின் என கேலி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story