தொழில் அதிபரிடம் ரூ.1.65 கோடி கொள்ளையடித்த 9 பேருக்கு ஜெயில்- தின்தோஷி கோர்ட்டு தீர்ப்பு

மும்பை,
மும்பை சார்க்கோப் பகுதியை சேர்ந்த தொழிலதிபர். இவரது வீட்டிற்கு கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 2-ந்தேதி 9 பேர் கொண்ட கும்பல் காரில் வந்து இறங்கினர். பின்னர் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகப்படுத்தி கொண்டு வீட்டை சோதனை போட வேண்டும் என தொழிலதிபரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வீட்டில் இருந்த அனைவரது செல்போன்கள், மற்றும் அலமாரியில் இருந்த ரூ.40 லட்சம் நகைகள், ரூ.1 கோடி ரொக்கம், ரூ.25 லட்சம் கைக்கடிகாரம் என மொத்தம் ரூ.1 கோடியே 65 லட்சம் மதிப்புள்ள பொருட்களை எடுத்து கொண்டனர்.
பின்னர் தொழிலதிபர் மற்றும் குடும்ப உறுப்பினர்களை ஒர்லியில் உள்ள அலுவலகத்திற்கு வருமாறு கூறிவிட்டு அங்கிருந்து காரில் ஏறி அவசர, அவசரமாக புறப்பட்டு சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த தொழிலதிபர் உடனடியாக ஒர்லியில் உள்ள வருமானவரித்துைற அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது, யாரும் அவரது வீட்டிற்கு வரவில்லை எனவும் வந்த கும்பல் அதிகாரிகளாக நடித்து நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றதும் தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட தொழிலதிபர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இதில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல நடித்து கொள்ளை அடித்த கும்பலின் அடையாளம் தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், தின்தோஷி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணையின் போது 21 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் அவர்களின் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து 6 பேருக்கு தலா 10 ஆண்டு ஜெயில்தண்டனையும், 3 பேருக்கு தலா 5 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.






