காங்கிரஸ் சார்பில் 'ஜன் சம்வத் யாத்ரா' நடைபயணம் தொடக்கம்; நானா படோலே, விஜய் வடேடிவார் பங்கேற்பு
மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‘ஜன் சம்வத் யாத்ரா' நடைபயணம் தொடங்கியது. நடைபயணத்தில் நானா படோலே, விஜய் வடேடிவார் பங்கேற்றனர்.
மும்பை,
மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 'ஜன் சம்வத் யாத்ரா' நடைபயணம் தொடங்கியது. நடைபயணத்தில் நானா படோலே, விஜய் வடேடிவார் பங்கேற்றனர்.
நடைபயணம் தொடக்கம்
மராட்டியத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'ஜன் சம்வத் யாத்ரா' நடைபயணம் நேற்று தொடங்கியது. இந்த நடைபயணம் வருகிற 12-ந் தேதி வரை நடக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சியை பலப்படுத்த காங்கிரஸ் இந்த நடைபயணத்தை தொடங்கி உள்ளது. வார்தா மாவட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே நடைபயணத்தை தொடங்கி வைத்தார். இதேபோல நாக்பூரில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் விஜய் வடேடிவார் தலைமையிலும், கோலாப்பூரில் முன்னாள் மந்திரி சாதேஜ் பாட்டீல் தலைமையிலும் நடைபயணம் நடந்தது. நடைபயணத்தின் போது தலைவர்கள், தொண்டர்களுடன் பேரணியாக சென்று பொது மக்களை சந்தித்து பேசினர். இதுதவிர கட்சிரோலி உள்ளிட்ட பல பகுதிகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் 'ஜன் சம்வத் யாத்ரா' நடைபயணம் தொடங்கப்பட்டது. அகமதுநகரில் இன்று முன்னாள் மந்திாி பாலாசாகேப் தோரட் தலைமையில் காங்கிரஸ் நடைபயணம் நடைபெற உள்ளது. காங்கிரஸ் நடைபயணத்தின் போது மாநில தலைவர் நானா படோலே கூறியதாவது:-
திசை திருப்பும் முயற்சி
மத்திய, மாநில அரசுகளின் தவறான கொள்கைகளால் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் வறட்சி நிலையை சந்தித்து உள்ளது. வேளாண் பயிர்கள் நாசமாகி உள்ளன. மராட்டிய அரசு சட்டவிரோத, அரசியல் சாசனத்துக்கு எதிராக அமைக்கப்பட்டதாகும். மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி கூட்டத்தை திசை திருப்ப ஜல்னாவில் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மராத்தா சமூகத்தினர் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மரத்வாடாவில் நிறுத்தி வைப்பு
இதற்கிடையே போலீஸ் தடியடி சம்பவத்தை கண்டித்து மரத்வாடாவில் பல மாவட்டங்களில் மராத்தா சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மரத்வாடா மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் மட்டும் காங்கிரஸ் கட்சியின் ஜன் சம்வத் யாத்திரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் மரத்வாடாவில் காங்கிரஸ் ஜன் சம்பவத் யாத்திரைக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என அவரது எக்ஸ் பக்கத்தில் கூறி உள்ளார்.