ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரி பயிற்சி டாக்டர்கள் போராட்டம்

மும்பை,
மும்பையில் ஜே.ஜே. அரசு ஆஸ்பத்திரி உள்ளது. நகரில் உள்ள மிகப்பெரிய ஆஸ்பத்திரிகளில் ஒன்றான இதில் நேற்று முன்தினம் பயிற்சி டாக்டர்கள் திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தை தொடங்கினர். கண் சிகிச்சைப்பிரிவு தலைவர் ராகினி பாரேக், முன்னாள் ஆஸ்பத்திரி டீன் லகானேயை கண்டித்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மூத்த டாக்டர்கள் 2 பேரும் கண் சிகிச்சை பிரிவில் அனைத்து அறுவை சிகிச்சைகளையும் செய்வதாக பயிற்சி டாக்டர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அவர்கள் பயிற்சி டாக்டர்கள் கற்றுக்கொள்ள இடம் கொடுக்காமல் இருப்பதாகவும், கண் சிகிச்சைப்பிரிவை சர்வாதிகாரபோக்கில் தேசிய மருத்துவ கமிஷனின் விதிகளை மீறி நடத்துவதாக குற்றம்சாட்டி உள்ளனர். தன் மீதான குற்றச்சாட்டை டாக்டர் லகானே மறுத்து உள்ளார். ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து 9 மூத்த டாக்டர்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக அவர் கூறினார். இந்தநிலையில் 2-வது நாளாக நேற்றும் ஜே.ஜே. ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடந்தது.
நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ேஜ.ஜே. ஆஸ்பத்திரி டாக்டர்கள் பிரச்சினையில் சுமூகமாக தீர்வு கண்டு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் அஜித்பவார் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.






