மராட்டியம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்


மராட்டியம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டம்
x

நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மராட்டியத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சர்ச்சை பேச்சு

பா.ஜனதா முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் டி.வி. விவாத நிகழ்ச்சியில் முகமது நபி குறித்து சர்ச்சை கருத்தை கூறினார். இதற்கு இஸ்லாமிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதேபோல இருபிரிவினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசிய பா.ஜனதாவை சேர்ந்த நவீன் ஜின்டாலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்தநிலையில் நுபுர் சர்மா, நவீன் ஜின்டால் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

3 ஆயிரம் பேர் பங்கேற்பு

நவிமும்பை பன்வெல் பகுதியில் நடந்த போராட்டத்தில் ஆயிரம் பெண்கள் உள்பட சுமார் 3 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். அவர்கள் நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பன்வெல் தாசில்தாரிடம் மனு கொடுத்தனர். இதேபோல வாஷி சிவாஜி சவுக் பகுதியிலும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் வாஷி போலீஸ் நிலையத்தில் மனு கொடுத்தனர்.

இதேபோல தானே, அவுரங்காபாத், சோலாப்பூர், நந்துர்பூர், பர்பானி, பீட், லாத்தூர், பண்டாரா, சந்திராப்பூர், புனே போன்ற பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்தன. போராட்டங்களில் நுபுர் சர்மா, ஜின்டால் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டம் நடந்த பகுதிகளில் அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மாநிலம் முழுவதும் போராட்டங்கள் அமைதியான முறையில் நடந்ததாக உள்துறை மந்திரி திலீப் வால்சே பாட்டீல் கூறினார்.


Next Story