தாஜ் ஓட்டலுக்கு மிரட்டல் விடுத்த போதை ஆசாமி கைது
கேட்வே ஆப் இந்தியா அருகே உள்ள தாஜ் ஓட்டலுக்கு மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர்
மும்பை,
மும்பை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் அழைப்பு ஒன்று வந்தது. இதில் பேசியவர் தன்னை முகேஷ் சிங் என அறிமுகப்படுத்திக்கொண்டார். பின்னர் அவர் கேட்வே ஆப் இந்தியா அருகே உள்ள தாஜ் ஓட்டல் மீது தாக்குதல் நடத்த பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 2 பேர் வரவுள்ளதாகவும் கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்து ஓட்டலை தகர்ப்பது தான் அவர்களின் திட்டம் எனவும் தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கூறியது பொய்யான தகவல் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் முகேஷ் சிங் என தெரிவித்த நபரின் உண்மையான பெயர் பிரசாத் சிங் எனவும், உத்தரபிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்த அவர் மும்பை சாந்தாகுருசில் வசித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். குடிபோதையில் அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசியது விசாரணையில் தெரியவந்தது.