மாநகராட்சி பள்ளிகளில் இரவுநேர வகுப்பு; மந்திரி மங்கள் பிரபாத் லோதா தொடங்கி வைத்தார்


மாநகராட்சி பள்ளிகளில் இரவுநேர வகுப்பு; மந்திரி மங்கள் பிரபாத் லோதா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 8 Sep 2023 7:45 PM GMT (Updated: 8 Sep 2023 7:45 PM GMT)

மும்பை மாநகராட்சி பள்ளிகளில் இரவுநேர வகுப்பு திட்டத்தை மந்திரி மங்கள் பிரபாத் லோதா தொடங்கி வைத்தார்.

மும்பை,

மும்பை மாநகராட்சி பள்ளிகளில் இரவுநேர வகுப்பு திட்டத்தை மந்திரி மங்கள் பிரபாத் லோதா தொடங்கி வைத்தார்.

இரவுநேர வகுப்பு

மும்பை மாநகராட்சி பள்ளி கல்வித்துறை சார்பில், மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்துவதற்காக இரவு நேர வகுப்பு தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக பண்டித் தீன்தயாள் உபாத்யா திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று அந்தேரி கிழக்கு கோல்டோங்கிரி நித்தியானந்தா சாலையில் முதலாவது இரவு நேர வகுப்பு தொடங்கப்பட்டது. இந்த வகுப்பை மும்பை பொறுப்பு மந்திரி மங்கள் பிரபாத் லோதா தொடங்கி வைத்தார். விழாவில் எம்.எல்.ஏ. பராக் அல்வானி, மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கல்வித்திறன் அதிகரிக்கும்

பின்னர் மந்திரி மங்கள் பிரபாத் லோதா கூறியதாவது:- மாணவ-மாணவிகளின் கல்வித்திறனை அதிகரிக்க இரவு நேர வகுப்பு பேருதவியாக இருக்கும். சத்ரபதி சிவாஜி மகாராஜின் முடிசூட்டு விழாவின் 350-வது ஆண்டை குறிக்கும் வகையில் மும்பை மாநகர் முழுவதும் மாநகராட்சி பள்ளிகளில் 350 வகுப்புகளை தொடங்க உறுதி எடுத்து உள்ளோம். இதற்கு மாநில முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்- மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் முழு ஆதரவு அளித்து உள்ளனர்.

2 மணி நேரம் செயல்படும்

9 மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள் இரவு நேர வகுப்புகளில் சேர்ந்து பயன்பெறலாம். மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை வகுப்புகள் செயல்படும். மாணவ- மாணவிகளுக்கு தனித்தனி வகுப்பறைகள் ஒதுக்கப்படும். இந்த வகுப்புகளில் சேர பெற்றோர் ஒப்புதல் கடிதம் சமர்பிக்க வேண்டும். இந்த திட்டத்தினால் சுமார் 4 லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story