ஒப்பந்த ஊழியர்களை பணியமர்த்த எதிர்ப்பு; தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ. உண்ணாவிரத போராட்டம்
ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணி அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
புனே,
ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணி அமர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
உண்ணாவிரத போராட்டம்
மாநில அரசு பல்வேறு துறைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்ஜாத்- ஜாம்கேத் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. ரோகித் பவார் நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். கஞ்ச்பேத் பகுதியில் மகாத்மா புலேவாடா பகுதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணியை சேர்ந்த புனே நகர கட்சி தலைவர் பிரசாத் ஜக்தாப் மற்றும் கட்சி தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர். போராட்டம் குறித்து எம்.எல்.ஏ. ரோகித் பவார் கூறியதாவது:-
75 ஆயிரம் பணியிடங்கள்
மாநில அரசு பல்வேறு துறைகளில் ஒப்பந்த பணியாளர்களை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்துகிறோம். இந்த புதிய ஆள்சேர்ப்பு நடைமுறைகளின் மூலமாக சுமார், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும். ஆனால் அவர்களுக்கு குறைந்த அளவு ஊதியமே வழங்கப்படும். அதிலும் அவர்களின் தொழிலாளர் வைப்பு நிதிக்காக பிடிக்கும் பணத்தை கழித்துவிட்டால் குறைந்த தொகையே அவர்களின் கைகளுக்கு சென்று சேரும். ஆனால் அவர்களை பணியமர்த்திய ஒப்பந்ததாரர் செல்வசெழிப்புடையவராக மாறுவார். இதேபோல முக்கிய ஆள்சேர்ப்பு பணிகளுக்கான தேர்வு தாள்கள் கசிவது வாடிக்கையாக மாறிவிட்டது. இதனை தடுக்க ராஜஸ்தான் அரசு கொண்டுவந்த சட்டத்தின் அடிப்படையில் புதிய சட்டத்தை மராட்டியத்திலும் அறிமுகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.