வாகனங்களில் அதிக பயணிகள் ஏற்றிச்செல்வதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு- பட்னாவிஸ் தகவல்

சம்ருத்தி நெடுஞ்சாலையில் வாகனங்களில் அதிக பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகிறார்களா என்பதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக சட்டசபையில் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
மும்பை,
சம்ருத்தி நெடுஞ்சாலையில் வாகனங்களில் அதிக பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகிறார்களா என்பதை கண்காணிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக சட்டசபையில் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.
6 பேர் பலி
புல்தானாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த சாலை விபத்தில் காரில் சென்ற அவுரங்காபாத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 6 பேர் பலியானார்கள். மேலும் அந்த காரில் சென்ற 7 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டசபையில் சஞ்சய் ராய்முல்கர் எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில், "சம்ருத்தி நெடுஞ்சாலையில் சில விபத்து பகுதிகள் உள்ளன. அந்த பகுதிகளில் செல்லும் போது வாகனங்கள் குதிக்கின்றன. இதனால் டிரைவர்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதி விடுகின்றன. எனவே விபத்து நடைபெறும் இடங்களை கண்டறிந்து அரசு விபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்குமா என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுமா?" என கேள்வி எழுப்பினார்.
அதிகாரிகளுக்கு உத்தரவு
இதற்கு பதில் அளித்து பேசிய மந்திரி சம்பாஜி தேசாய், விபத்தில் சிக்கிய கார் வேகமாக சென்றதாகவும், 7 பேர் செல்ல வேண்டிய காரில் 13 பயணிகள் இருந்ததாகவும் கூறினார். விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியுமா என்பதை அரசு ஆய்வு செய்யும் எனவும் கூறினார்.
இதையடுத்து பேசிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சாம்ருத்தி நெடுஞ்சாலையில் வாகனங்களில் அதிக பயணிகள் ஏற்றி செல்லப்படுகிறார்களா? என்பதை கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம். என்றார்.






