15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசு வாகனங்கள் அழிக்கப்படும்- மாநில அரசு முடிவு

ஜூன் மாதத்திற்குள் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசு வாகனங்களை அழிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
மும்பை,
ஜூன் மாதத்திற்குள் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசு வாகனங்களை அழிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
அரசு வாகனங்கள் அழிப்பு
சுற்றுச்சூழல் மாசை குறைக்கவும், விபத்துக்களை தவிர்க்கவும் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வாகனங்களை அழிக்க மத்திய அரசு, அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி உள்ளது. மத்திய அரசின் வாகன அழிப்பு கொள்கைக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாநில மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசு வாகனங்களை வருகிற ஜூன் மாதத்திற்குள் அழிக்க மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
பசுமை வரி அதிகரிப்பு
மேலும் இதுதொடர்பாக கூடுதல் போக்குவரத்து கமிஷனர் ஜே.பி. பாட்டீல் கூறுகையில், "15 ஆண்டுகளுக்கு மேல் பழமையான அரசு வாகனங்கள் அழிக்கப்பட உள்ளது. இதேபோல 15 ஆண்டுகள் பழமையான தனியார் வாகனங்களுக்கு பசுமை வரியை அதிகரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது. மாசு கட்டுப்பாட்டு விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கும் அபராதத்தை அதிகரிக்க அரசு முடிவு செய்து உள்ளது" என்றார்.
இதுதவிர பழமையான வாகனங்களை அழிக்கும் மையங்களையும் அதிக அளவில் தொடங்க அரசு திட்டமிட்டு உள்ளது. இது தொடர்பாக மாநில போக்குவரத்து கமிஷனர் விவேக் பிமன்வர் கூறுகையில், "மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அழிக்க மையங்கள் அமைக்கப்பட உள்ளது. அங்கு அறிவியல் முறையில் வாகனங்களை அழிக்க முடியும்" என்றார்.






