மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதி வாலிபர் பலி; மனைவி, 2 குழந்தைகள் காயம்

மும்பை- ஆமதாபாத் நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார். மனைவி மற்றும் 2 குழந்தைகள் காயமடைந்தனர்
வசாய்,
பால்கர் மாவட்டம் மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை காசா பகுதியில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் நோக்கி ரத்னாராம் (வயது31) என்பவர் தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் காரில் புறப்பட்டு சென்றார். அப்போது முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால் பின்புறமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து லாரியின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. இதில் காரை ஓட்டி வந்த ரத்னாராம், அவரது மனைவி, குழந்தைகள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த காசா போலீசார் அங்கு சென்று அவர்களை மீட்டனர். இதில் ரத்னாராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் படுகாயமடைந்த மற்ற 3 பேரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






