'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அரசு பணத்தை மிச்சப்படுத்தும் - மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே கருத்து
‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் அரசு பணத்தை மிச்சப்படுத்தும் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
மும்பை,
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் அரசு பணத்தை மிச்சப்படுத்தும் என்று முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
ரூ.10 ஆயிரம் கோடி செலவு
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முறையின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இது குறித்து நேற்று மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்திய தேர்தல் ஆணையம் 2019-ம் ஆண்டு பொது தேர்தலுக்கு ரூ.10 ஆயிரம் கோடி ரூபாயை செலவழிக்க வேண்டி இருந்தது. நியாயமான, சுமூகமான தேர்தலை நடத்த அரசு கஜானாவில் உள்ள மக்களின் பணம் செலவிடப்படுகிறது. முழு அரசு எந்திரம், ஆசிரியர்கள் மற்றும் பிற அதிகாரிகள் இந்த பணியில் ஈடுபட வேண்டும். அனைத்து தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தினால் இதுபோன்ற அதிக செலவுகளை தவிர்க்க முடியும். இதன்மூலம் மக்கள் பயனடைவார்கள், எனவே நான் இந்த யோசனையை ஆதரிக்கிறேன்.
ஊழல் குற்றச்சாட்டுகள்
இந்தியா கூட்டணி தலைவர்கள் பிரதமர் நரேந்திர மோடி மீது வெறுப்பில் உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள அவர்களால் ஒரு தலைவரை கூட முடிவு செய்ய முடியாதது தோல்வியாகும். பிரதமர் மோடி இந்தியாவை முன்நோக்கி கொண்டு செல்கிறார். ஆனால் இந்தியா கூட்டணி அவரது பணிகளுக்கு இடையூறாக உள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து தலைவர்களும் தங்கள் சொந்த நலனை மட்டுமே பாதுகாக்க நினைக்கின்றனர். ஆனால் அவர்கள் பார்வைக்கு அவர்கள் கூட்டாக செயல்படுவதுபோல நடிக்கிறார்கள். லாலு பிரசாத்யாதவ், நிதிஷ் குமார் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் என அனைவரும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் போலீஸ் புகார்களை எதிர்கொள்கின்றனர். பேவ் ஆய்வு அறிக்கையின்படி நாட்டில் 80 சதவீத மக்கள் பிரதமர் மோடியை ஆதரிக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.