போலீஸ் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்: 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்


போலீஸ் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்: 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 2 Sep 2023 7:45 PM GMT (Updated: 2 Sep 2023 7:45 PM GMT)

போலீஸ் வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்த சம்பவத்தில் பணியில் அலட்சியமாக செயல்பட்ட 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மும்பை,

போலீஸ் வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந்த சம்பவத்தில் பணியில் அலட்சியமாக செயல்பட்ட 2 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

சூதாட்டம் ஆடிய கும்பல்

நவிமும்பை போலீசில் அமோல் சங்கர், சந்திரசேகர் ஆகிய 2 பேர் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருகின்றனர். கடந்த 1-ந் தேதி மூத்த அதிகாரி அழைத்ததின் பேரில் போலீஸ் வாகனத்தை கொண்டு சென்றனர். அப்போது திறந்தவெளி மைதானத்தில் கும்பல் சீட்டு வைத்து சூதாட்டம் விளையாடிக்கொண்டு இருந்ததை கண்டனர். இதையடுத்து அக்கும்பலை பிடிக்க வாகனத்தை அங்கு திருப்பி வேகமாக சென்றனர். போலீஸ் வருவதை கண்ட கும்பல் அங்கிருந்து தப்பி ஓடினர்.

பணி இடைநீக்கம்

இதற்கிடையில் போலீஸ் வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் அருகிலுள்ள குடிசை பகுதியை சேர்ந்த அசோக் மஞ்சுளே மீது மோதியது. பின் அங்கிருந்த சுவர் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அசோக் மஞ்சுளே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் துறைரீதியான விசாரணையும் நடத்தப்பட்டது. இதில் போலீஸ்காரர்கள் இருவரும் பணியில் அலட்சியமாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன்படி அவர்களை பணி இடைநீக்கம் செய்து கமிஷனர் உத்தரவிட்டார்.


Next Story