நாசிக் மாவட்டத்தில் வெங்காய வியாபாரிகள் போராட்டம் வாபஸ்; 13 நாட்களுக்கு பிறகு ஏலம் தொடங்கியது


நாசிக் மாவட்டத்தில் வெங்காய வியாபாரிகள் போராட்டம் வாபஸ்; 13 நாட்களுக்கு பிறகு ஏலம் தொடங்கியது
x
தினத்தந்தி 3 Oct 2023 8:00 PM GMT (Updated: 3 Oct 2023 8:00 PM GMT)

நாசிக் மாவட்டத்தில் வெங்காய வியாபாரிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் 13 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏலம் தொடங்கியது.

மும்பை,

நாசிக் மாவட்டத்தில் வெங்காய வியாபாரிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனால் 13 நாட்களுக்கு பிறகு மீண்டும் ஏலம் தொடங்கியது.

வியாபாரிகள் போராட்டம்

உள்நாட்டில் வெங்காய தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக மத்திய அரசு 40 சதவீத ஏற்றுமதி வரியை உயர்த்தியது. இதற்கு வெங்காய வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஏற்றுமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 20 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நாசிக் மாவட்ட வெங்காய வியாபாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் நாசிக் மாவட்ட வெங்காய சந்தைகளில் வெங்காய ஏலத்தை வியாபாரிகள் நிறுத்தினர். இதில் ஆசியாவின் மிகப்பெரிய லசல்காவ் வெங்காய சந்தையும் அடங்கும். இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். வெங்காய வினியோகம் பாதிக்கப்படும் என்பதால் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டது.

வேலை நிறுத்தம் வாபஸ்

இந்தநிலையில் நேற்று முன்தினம் நாசிக் மாவட்ட பொறுப்பு மந்திரி ததா புசே வெங்காய வியாபாரிகளை சந்தித்து பேசினார். அப்போது வியாபாரிகளின் கோரிக்கைகளை 1 மாதத்துக்குள் அரசு நிறைவேற்றும் என்று அவர் உறுதி அளித்தார். இதனால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை திரும்ப பெற வியாபாரிகள் சம்மதித்தனர். இந்தநிலையில் வியாபாரிகளின் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்ததால், 13 நாட்களுக்கு பிறகு நேற்று வழக்கம் போல் நாசிக் மாவட்டத்தில் உள்ள வெங்காய சந்தைகள் திறக்கப்பட்டன. அங்கு ஏலம் விடும் பணியும் தொடங்கியது. நேற்று லசல்காவ் சந்தைக்கு 545 வெங்காய வாகனங்கள் வந்திருந்தன. குவிண்டாலுக்கு சராசரியாக ரூ.2,100 ஏலம் போனது. அரசு அளித்த வாக்குறுதிபடி ஒரு மாதத்துக்குள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டத்தில் குதிப்போம் என்று நாசிக் மாவட்ட வெங்காய வியாபாரிகள் சங்க தலைவர் காந்து தியாரே கூறினார்.


Next Story