மும்பையில் பயணிகள் சொகுசு படகு சேவை தொடக்கம்

மும்பையில் பயணிகள் சொகுசு படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
மும்பை,
மும்பையில் பயணிகள் சொகுசு படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது.
சொகுசு படகு
மும்பையில் சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் நீர்வழி பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் கவனம் செலுத்தி வருகின்றன. தற்போது பாவுச்சா தக்கா -அலிபாக் இடையே ரோ-ரோ படகு சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த படகில் மும்பையில் இருந்து அலிபாக் செல்ல 60 முதல் 70 நிமிடங்கள் ஆகிறது. இதே படகு மும்பை - ராய்காட் மாவட்டத்தில் உள்ள மண்ட்வா இடையே இயக்கப்பட்டால் 3 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியது வரும்.
இந்தநிலையில் நேற்று மும்பை மஜ்காவில் உள்ள பெரிவார்ப் உள்நாட்டு படகு துறைமுகத்தில் இருந்து ராய்காட் மாவட்டத்தில் உள்ள மண்ட்வா பகுதிக்கு நயன்தாரா கப்பல் நிறுவனத்தின் 'நயன்- 11' அதிவேக சொகுசு படகு சேவை தொடங்கப்பட்டது.
ரூ.400 கட்டணம்
'நயன்- 11' அதிவேக சொகுசு படகு கோவாவில் வடிவமைக்கப்பட்டதாகும். இந்த படகில் கீழ் தளத்தில் 140 பயணிகளும், கடல் அழகை பார்த்து ரசித்தப்படி மேல் தளத்தில் 60 பயணிகளும் செல்ல முடியும். கீழ் தளத்துக்கு ரூ.400-ம், மேல் தளத்துக்கு ரூ.450-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
மும்பையில் முதல் முறையாக இயக்கப்படும் அதிவேக மாடி படகு (டபுள் டெக்) இதுவாகும். அதிகபட்சம் 22 மைல் வேகத்தில் செல்லும் இந்த படகு 40 நிமிடங்களில் மும்பையில் இருந்து ராய்காட் சென்றடையும். மேலும் படகு முழுவதும் ஏ.சி. வசதி கொண்டதாகும். கீழ் தளத்தில் 4 கழிவறைகள், மேல் தளத்தில் 2 கழிவறை வசதிகள் உள்ளன.
தினசரி 6 சேவைகள் இயக்கப்பட உள்ளன. இதில் மும்பையில் இருந்து மண்ட்வாவுக்கு காலை 10.30, பகல் 12.50, பிற்பகல் 3.10 மணிக்கும், மண்ட்வாவில் இருந்து மும்பைக்கு காலை 11.40, பிற்பகல் 2, மாலை 4.20 மணிக்கும் சேவைகள் இயக்கப்படுகிறது.






