பி.கே.சி. மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடத்த ஷிண்டே அணிக்கு அனுமதி


பி.கே.சி. மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடத்த ஷிண்டே அணிக்கு அனுமதி
x

பி.கே.சி.யில் எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடத்த ஷிண்டே அணிக்கு அனுமதி கிடைத்து உள்ளது.

மும்பை,

பி.கே.சி.யில் எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடத்த ஷிண்டே அணிக்கு அனுமதி கிடைத்து உள்ளது.

சிவசேனா தசரா பொதுக்கூட்டம்

சிவசேனா உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே அணியாக உடைந்து உள்ளது. ஆண்டுதோறும் சிவசேனா சார்பில் சிவாஜி பார்க் மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடைபெறும். இந்த ஆண்டு சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த உத்தவ் தாக்கரே அணியினர் முதலில் விண்ணப்பித்தனர். இதைத்தொடர்ந்து ஷிண்டே அணியினரும் சிவாஜிபார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த விண்ணப்பித்தனர்.

இதனால் சிவாஜிபாா்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்குவதில் மாநகராட்சிக்கு சிக்கல் ஏற்பட்டது.

ஷிண்டே அணிக்கு அனுமதி

இதற்கிடையே தசரா பொதுக்கூட்டம் நடத்த ஷிண்டே அணியினர் பி.கே.சி.யில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்திலும் விண்ணப்பித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து உத்தவ் அணியும் எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்துக்கு விண்ணப்பித்தது.

இந்தநிலையில் மும்பை பெருநகர வளர்ச்சி குழுமம் அடுத்த மாதம் 5-ந் தேதி எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் தசரா பொதுக்கூட்டம் நடத்த ஷிண்டே அணிக்கு அனுமதி அளித்து உள்ளது. அதே நேரத்தில் உத்தவ் தாக்கரே அணியின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. உத்தவ் தாக்கரே அணி கேட்ட மைதானம் ஏற்கனவே மற்றொரு நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.

சிவாஜி பார்க்கில் நடைபெறுமா?

இந்தநிலையில் சிவாஜி பார்க்கில் சிவசேனா பொதுக்கூட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. ஏக்நாத் ஷிண்டே அணிக்கு எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானம் வழங்கப்பட்டது போல, சிவாஜிபார்க் மைதானத்தில் உத்தவ் தாக்கரே அணி தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என அந்த அணியை சேர்ந்த அரவிந்த் சாவந்த் எம்.பி. கூறியுள்ளாா்.

இந்தநிலையில் சிவாஜிபார்க்கில் உத்தவ் தாக்கரே அணிக்கு பொதுக்கூட்டம் நடத்த இதுவரை அனுமதி வழங்காதது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இதற்கு முன் எந்த அடிப்படையில் சிவாஜி பார்க்கில் தசரா பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதன் பிறகு முடிவு எடுக்கப்படும்" என்றார்.


Next Story