வாஷி மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீசார்

வாஷி மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போக்குவரத்து போலீசார் லாவகமாக பிடித்து மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
மும்பை,
வாஷி மேம்பாலத்தில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போக்குவரத்து போலீசார் லாவகமாக பிடித்து மீட்டனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.
தற்கொலை முயற்சி
மும்பை- நவிமும்பையை இணைக்கும் பாலமாக வாஷி மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தில் நடந்து வந்த பெண் ஒருவர் திடீரென இரும்பு கம்பியை பிடித்து கொண்டு பாலத்தின் மறுபுறம் சென்று கீழே கழிமுக கால்வாயில் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதனை கண்ட போக்குவரத்து போலீஸ்காரர் சிவாஜிராவ் அங்கு விரைந்து சென்றார். மேலும் உதவிக்காக மற்றொரு போக்குவரத்து போலீஸ்காரர் ராஜூ தண்டேக்கரை அங்கு வரவழைத்தார். தன்னை காப்பாற்ற முயன்றால் கீழே குதித்து விடுவதாக அப்பெண் அவர்களை மிரட்டினார்.
போலீசார் அவரிடம் சமாதானமாக பேசி தற்கொலை முடிவை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
பெண்ணை மீட்ட போலீசார்
இதற்கிடையே அங்கு கூட்டம் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது ஒரு போலீஸ்காரர் பெண்ணை நெருங்கிய போது பாலத்தின் விளம்பில் நின்று கொண்டு குதித்து விடுவதாக மீண்டும் மிரட்டினார்.
இதையடுத்து பெண்ணிடம் பேசி கவனத்தை திசை திருப்பிய போது மறுபுறம் நின்ற போலீஸ்காரர் சிவாஜிராவ் விரைந்து சென்று அப்பெண்ணை கீழே குதிக்க விடாமல் இறுக பற்றி கொண்டார். இதனால் மற்றவர்கள் அப்பெண்ணை பிடித்து அங்கிருந்து மீட்டனர். துணிச்சலுடன் போராடி அப்பெண்ணை காப்பாற்றிய போலீஸ்காரரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மீட்கப்பட்ட பெண்ணை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பெண்ணின் உறவினர்களை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையம் வரவழைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போலீசார், அவருக்கு மனநல ஆலேசனை வழங்கி குடும்பத்தினருடன் அனுப்பி வைத்தனர்.






