'இந்தியா' கூட்டணி கூட்டத்திற்கு ஏற்பாடுகள் தீவிரம்; நிகழ்ச்சி ஏற்பாட்டுக்காக குழுக்கள் அமைப்பு

‘இந்தியா’ கூட்டணி கூட்டத்திற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
மும்பை,
'இந்தியா' கூட்டணி கூட்டத்திற்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.
மும்பையில் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' என்ற மாபெரும் கூட்டணியை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவில் நடைபெற்றது. 2-வது கூட்டம் கடந்த மாதம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த நிலையில் 3-வது கூட்டத்தை வரும் 31 மற்றும் அடுத்த மாதம் 1-ந் தேதி மும்பையில் நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்பட 28 எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். அதுமட்டும் அல்லாத 6 மாநிலங்களின் முதல்-மந்திரிகளும் கலந்துகொள்கின்றனர்.
குழுக்கள் அமைப்பு
இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக இந்த கூட்டணி கட்சிகள் ஆலோசனை நடத்தி கூட்டத்தின் பல்வேறு அம்சங்களை திட்டமிட பல குழுக்களை அமைத்துள்ளது. இதன்படி ஊடகங்கள், சமூக ஊடகங்கள், தங்குமிடம், போக்குவரத்து உள்ளிட்டவற்றை 3 கட்சிகளிலும் இருந்து தலா 2 தலைவர்கள் அடங்கிய குழுக்கள் கையாள உள்ளன.
ஊடகம்
இதன்படி ஊடகம் மற்றும் விளம்பரங்களை காங்கிரஸ் கட்சி கையாளுகிறது. அதேவேளையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி போக்குவரத்து நடைமுறைகளை கவனித்துக்கொள்கிறது. உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சி தங்குமிட வசதிகளை கவனித்துக்கொள்கிறது. தலைவர்கள் தங்குவதற்காக கிராண்ட் ஹயார்ட் ஓட்டலில் 200-க் கும் மேற்பட்ட அறைகள் முன்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கு தான் 2 நாள் சந்திப்புகள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தை மேற்பார்வையிடும் பொறுப்பு காங்கிரஸ் தலைவர்கள் மிலிந்த் தியோரா, நசீம் கான் மற்றும் வர்ஷா கெய்க்வாட் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் முன்னாள் முதல்-மந்திரியும், மூத்த தலைவருமான அசோக் சவான் ஏற்பாட்டு குழுவின் மொத்த பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த கூட்டத்தின் விவரங்களை குறித்து அறிவிக்க மகா விகாஸ் அகாடி தலைவர்கள் 30-ந் தேதி செய்தியாளர்களை சந்திப்பார்கள் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.






