ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா மும்பை பயணம் ரத்து

சிவசேனா கட்சியின் முடிவால் ஜனாதிபதி வேட்பாளர் யஷ்வந்த் சின்கா தனது மும்பை பயணத்தை ரத்து செய்தார்.
மும்பை,
ஜனாதிபதி தேர்தல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் பா.ஜனதா கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு மற்றும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்கா ஆகியோர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் யஷ்வந்த் சின்கா இன்று மும்பை வந்து மகா விகாஸ் அகாடி கூட்டணி (சிவசேனா- காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்) கட்சிகளை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்களை சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டு இருந்தார். ஆனால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. சிவசேனா திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்து விட்டதால், யஷ்வந்த் சின்கா மும்பை வரவில்லை என்று தேசியவாத காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையே திரவுபதி முர்மு கடந்த வியாழக்கிழமை மும்பை வந்தபோது, பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், சிவசேனா அதிருப்தி அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கேட்டார். ஆனால் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயை அவர் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






