தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஊழல்வாதிகள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - சரத்பவார் வலியுறுத்தல்


தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஊழல்வாதிகள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - சரத்பவார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 July 2023 7:30 PM GMT (Updated: 8 July 2023 7:30 PM GMT)

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஊழல்வாதிகள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஊழல்வாதிகள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்பவார் வலியுறுத்தி உள்ளார்.

உடைந்த தேசியவாத காங்கிரஸ்

மராட்டிய அரசியலில் கடந்த 2-ந் தேதி நடந்த சூறாவளியாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் அண்ணன் மகனும், கட்சியின் மூத்த தலைவருமான அஜித்பவார் கட்சியை உடைத்து பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்தார். அவர் துணை முதல்-மந்திரியாகவும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் மந்திரியாகவும் பதவி ஏற்றனர். இதனால் தேசியவாத காங்கிரஸ் 2 ஆக உடைந்துள்ளது. இந்த நிலையில் கட்சியை பலப்படுத்தும் வகையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மாநிலம் தழுவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மந்திரி பதவி ஏற்ற சகன் புஜ்பாலின் தொகுதியான யோலாவில் நேற்று தனது முதல் பொதுகூட்டத்தை நடத்தினார்.

ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை

கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசிய சரத்பவார், " பிரதமர் நரேந்திர மோடி போபாலில் பேசியபோது, தேசியவாத காங்கிரஸ் கட்சி ரூ.70 ஆயிரம் கோடி ஊழலில் ஈடுபட்டதாக தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெரும் ஊழல் குறித்து பேசிய பிரதமர், அதில் தொடர்புடைய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். பிரதமர் மோடி அனைத்து அரசு எந்திரங்களையும் தனது வசம் வைத்துள்ளார். எனவே தவறில் ஈடுபட்டவர்களை அவர் தண்டிக்க வேண்டும்" என்றார். மேலும் மந்திரி சகன் புஜ்பாலை பெயர் குறிப்பிடாமல் தாக்கி பேசிய அவர், " சிலரை நம்பி நான் தவறு செய்துவிட்டேன். ஆனால் அந்த தவறை மீண்டும் ஒருமுறை செய்ய மாட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்கவே இங்கு வந்திருக்கிறேன்" என்றார். கட்சியை உடைத்து பா.ஜனதா கூட்டணியில் இணைந்த அஜித்பவார், சகன்புஜ்பால், ஹசன் முஷ்ரிப் உள்ளிட்டவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story