'பால் தாக்கரேயின் உண்மையான வாரிசு நாங்கள் தான்' - முதல்-மந்திரி ஷிண்டே பரபரப்பு பேச்சு

நாங்கள் எந்த துரோகமும் செய்யவில்லை, பால் தக்கரேயின் உண்மையாக வாரிசு நாங்கள் தான் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தசரா பொதுக்கூட்டத்தில் பரபரப்பாக பேசினார்.
மும்பை,
நாங்கள் எந்த துரோகமும் செய்யவில்லை, பால் தக்கரேயின் உண்மையாக வாரிசு நாங்கள் தான் என முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தசரா பொதுக்கூட்டத்தில் பரபரப்பாக பேசினார்.
தசரா பொதுக்கூட்டம்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணியின் பிரிவு காரணமாக மகா விகாஸ் அகாடி அரசு கவிழ்ந்தது. ஆட்சியை கைப்பற்றிய ஷிண்டே அணி நாங்கள் உண்மையான சிவசேனா என்று கூறி வருகிறது.
மேலும் கட்சியின பெயர் மற்றும் சின்னத்திற்கு தேர்தல் ஆணையத்திடம் உரிமை கோரி உள்ளது. இந்தநிலையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தசரா பொதுக்கூட்டத்தை ஷிண்டே தலைமையிலான அணி பாந்திரா குர்லா காம்பிளக்ஸ் வளாகத்தில் நடத்தியது. இந்த பொதுக்கூட்டத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே பேசியதாவது:-
உண்மையான வாரிசு
2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் மாநில வாக்காளர்கள் சிவசேனா மற்றும் பா.ஜனதாவை ஆட்சி அமைக்க தேர்வு செய்தனர். ஆனால் உத்தவ் தாக்கரே காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்து மகா விகாஸ் அகாடி கூட்டணியை உருவாக்கி மக்களுக்கு துரோகம் செய்தார்.
பால்தாக்கரே பாரம்பரியத்தின் உண்மையான வாரிசுகள் யார் என்பதை காட்டுவதற்கு எனது தசரா பேரணியில் திரளான மக்கள் திரண்டிருப்பதே போதுமான சாட்சியாகும். சிவசேனா கட்சி என்பது ஒரு தனியாருக்கு சொந்தமான நிறுவனம் இல்லை. 56 ஆண்டுகாலமாக இந்த கட்சியை கட்டி எழுப்பியவர்கள் சாதாரண சிவசேனா தொண்டர்கள் தான்.
மகா விகாஸ் அகாடி ஆட்சியை நாங்கள் சதி செய்து வீழ்த்தியதாக சிலர் கூறுகின்றனர். நான் செய்தது துரோகம் இல்லை. அது ஒரு போராட்டமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்
முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நடத்திய பேரணியில் உத்தவ் தாக்கரேவின் சகோதரர் ஜெய்தேவ் தாக்கரே மற்றும் மனைவி ஸ்மிதா தாக்கரே, மறைந்த பால் தாக்கரேவின் பேரன் நிகார் தாக்கரே, பால்தாக்கரேவின் தனிப்பட்ட உதவியாளராக நீண்டகாலம் பணியாற்றிய சம்பா சிங் தாபா ஆகியோரும் கலந்துகொண்டனர்.






