ஏக்நாத் ஷிண்டே நடத்தி வரும் நவராத்திரி மண்டலில் தரிசனம் செய்த ராஷ்மி தாக்கரே- அரசியலில் திடீர் பரபரப்பு

அரசியலில் திடீர் பரபரப்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நடத்தி வரும் நவராத்திரி மண்டலில் உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி தாக்கரே தரிசனம் செய்தார்.
தானே,
அரசியலில் திடீர் பரபரப்பாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நடத்தி வரும் நவராத்திரி மண்டலில் உத்தவ் தாக்கரே மனைவி ராஷ்மி தாக்கரே தரிசனம் செய்தார்.
துரோகிகள் என குற்றச்சாட்டு
சிவசேனாவில் மந்திரியாக இருந்த ஏக்நாத் ஷிண்டே தனக்கு ஆதரவாக 40 எம்.எல்.ஏக்களை திரட்டி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார். பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து முதல்-மந்திரியாக பதவி ஏற்றார்.
இதனால் ஏக்நாத் ஷிண்டே அணியினரை துரோகிகள் என்று உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்தவர்கள் வசைப்பாடி வருகின்றனர்.
ராஷ்மி தாக்கரே வருகை
இதற்கிடையில் நவராத்திரி விழாவிற்காக முதல்- மந்திரி ஏக்நாத் ஷிண்டே சார்பில் தானே டெம்பி நாக்கா மண்டலில் தேவி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்த மண்டல் தானேயை சேர்ந்த மறைந்த சிவசேனா தலைவரும், ஏக்நாத் ஷிண்டேயின் அரசியல் குருவுமான ஆனந்த் திகேவால் தொடங்கப்பட்டது ஆகும். தற்போது ஏக்நாத் ஷிண்டே மேற்பார்வையில் இந்த மண்டலில் நவராத்திரி விழா நடத்தப்பட்டு வருகிறது. இங்கு நவராத்தி தொடக்க விழாவில் நடந்த நிகழ்வில் ஷிண்டே கலந்து கொண்டு இருந்தார்.
இந்த மண்டலுக்கு உத்தவ் தாக்கரே மனைவியான ராஷ்மி தாக்கரே நேற்று திடீரென வந்தார். அவர் மண்டலில் பூஜை செய்து தேவி சிலையை தரிசனம் செய்தார்.
பரபரப்பு
அப்போது அங்கு உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனா கட்சியினர் திரளாக கூடினர். நவராத்திரி மண்டலில் ராஷ்மி தாக்கரேவை சுற்றி நின்றபடி அவருக்கு ஆதரவாக கோஷம் போட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தானே சிவசேனா எம்.பி. ராஜன் விச்சாரே, மாநிலங்களவை எம்.பி. பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக தானேயில் உள்ள ஆனந்த் திகேவின் ஆசிரமத்திற்கு சென்றும் ராஷ்மி தாக்கரே அஞ்சலி செலுத்தினார்.
எதிரணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தொடர்புடைய நவராத்திரி மண்டலுக்கு உத்தவ்தாக்கரே மனைவி ராஷ்மி தாக்கரே வருகை அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






