12 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை: 90-வது பிறந்த நாளை கொண்டாடிய ஆஷா போஸ்லே - திரைப்பட துறையினர் வாழ்த்து


12 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை: 90-வது பிறந்த நாளை கொண்டாடிய ஆஷா போஸ்லே - திரைப்பட துறையினர் வாழ்த்து
x
தினத்தந்தி 9 Sept 2023 1:45 AM IST (Updated: 9 Sept 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

12 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை படைத்த ஆஷா போஸ்லே நேற்று தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரைப்பட துறையினர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மும்பை,

12 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை படைத்த ஆஷா போஸ்லே நேற்று தனது 90-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு திரைப்பட துறையினர் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

பின்னணி பாடகி ஆஷா போஸ்லே

'மெலோடி குயின்', 'இந்தி பாப் குயின்' என அழைக்கப்படும் பிரபல சினிமா பின்னணி பாடகி ஆஷா போஸ்லே 1933-ம் ஆண்டு மராட்டிய மாநிலம் சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவருக்கு நேற்று 90 வயது பிறந்தது. 1943-ம் ஆண்டு மஜா பால் என்ற மராத்தி படத்தில் 'சலா சலா நவ் பாலா' என்ற பாடலுக்கு பின்னணி குரல் கொடுத்ததன் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகம் ஆனார். இந்தி, தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் தனது 80 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் சுமார் 12 ஆயிரம் பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். குறிப்பாக தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இளையராஜா இசையில் செண்பகமே, செண்பகமே என்ற பாடலை பாடினார். இதேபோல தமிழில் ஓ பட்டர்பிளை.. பட்டர் பிளை... என்ற பாடலையும் தனது மெல்லிய குரலில் பாடி ரசிகர்களை கவர்ந்தார்.

தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர்

வசீகர குரலால் ஏராளமான ரசிகர்களை சொக்க வைத்த ஆஷா போஸ்லேக்கு மத்திய அரசு திரைப்பட துறையில் உயரிய தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தது. 90 வயதிலும் மேடையேறி இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அசத்தி வரும் அவருக்கு திரைப்படத்துறையினர் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். துபாயில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது ஆஷா போஸ்லே கூறுகையில், "எல்லா துறையிலும் அரசியல் இருக்கிறது. சினிமா துறையிலும் அரசியல் இருக்கிறது. அது எளிதானது அல்ல. நான் விதியை அதிகம் நம்புகிறேன். எனக்கு எது தேவையோ அது என்னை வந்து சேரும். நான் பல சிரமங்களை எதிர்கொண்டேன். ஆனால் இன்று நான் திரும்பி பார்க்கும்போது, அதிலிருந்து நான் வெளியே வந்ததும் வேடிக்கையாக தெரிகிறது" என்றார். ஆஷா போஸ்லே மறைந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story