மாகிம் கோட்டையை சுற்றி கட்டப்பட்டிருந்த 200 குடிசைகள் அகற்றம்- மாநகராட்சி நடவடிக்கை

மாகிம் கோட்டையை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளதால் அங்கிருந்த 200 ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை மாநகராட்சி இடித்து அப்புறப்படுத்தியது.
மும்பை,
மாகிம் கோட்டையை சுற்றுலா தலமாக அறிவித்துள்ளதால் அங்கிருந்த 200 ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை மாநகராட்சி இடித்து அப்புறப்படுத்தியது.
மாகிம் கோட்டை
மராட்டிய புராதன சின்னமாக மும்பையில் உள்ள மாகிம் கோட்டை உள்ளது. பழமை வாய்ந்த இந்த கோட்டை கொங்கன் பகுதியை சேர்ந்த மன்னர் பிம்ப்தேவின் வாரிசுகள் கட்டியதாகவும், இந்த கோட்டை 1140-ம் ஆண்டு முதல் 1241-ம் ஆண்டு வரையில் பயன்பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த கோட்டை 1960-ம் ஆண்டு மாநில அரசால் பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் மாகிம் கோட்டையை சுற்றுலா தலமாக மாற்ற மாநில அரசு முன் வந்து உள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
இதனையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக மாகிம் கோட்டையை சுற்றி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகளை மாநகராட்சி இடித்து அகற்றியது.
சுற்றுலா தலம்
இது குறித்து மாநகராட்சி விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மாகிம் கோட்டையை சுற்றி ஆக்கிரமித்து கட்டப்பட்ட 200 குடிசை வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு வசித்து வந்த 260 குடும்பத்தினருக்கு மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் மாற்று இடம் வழங்கப்படும். ஏறக்குறைய அங்கு 3 ஆயிரம் பேர் வசித்து வந்தனர். அவர்கள் மலாடு, மால்வாணி மற்றும் பிற பகுதிகளில் உள்ள மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.
மாகிம் கோட்டையை சுற்றுலா தலமாக மாற்றும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக தொல்லியல்துறை அதிகாரி விகாஸ் திலாவாரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.






