அவுரங்காபாத், உஸ்மனாபாத்தை பெயர் மாற்றம்- உத்தவ் தாக்கரேயின் கடைசி மந்திரி சபையில் ஒப்புதல்


அவுரங்காபாத், உஸ்மனாபாத்தை பெயர் மாற்றம்- உத்தவ் தாக்கரேயின் கடைசி மந்திரி சபையில் ஒப்புதல்
x

அவுரகாபாத் நகருக்கு சம்பாஜிநகர் என்றும், உஸ்மனாபாத்திற்கு தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய மராட்டிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மாவட்ட செய்திகள்

மும்பை,

அவுரகாபாத் நகருக்கு சம்பாஜிநகர் என்றும், உஸ்மனாபாத்திற்கு தாராஷிவ் எனவும் பெயர் மாற்றம் செய்ய உத்தவ் தாக்கரேயின் கடைசி மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

தீர்மானம் நிறைவேற்றம்

அவுரங்காபாத் மற்றும் உஸ்மனாபாத் பெயரை மாற்ற வேண்டும் என சிவசேனா கூறி வந்தது. ஆனால் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு காரணமாக இந்த விஷயத்தில் உத்தவ் தாக்கரே அமைதி காத்து வந்தார். இதை பா.ஜனதா விமர்சனம் செய்து வந்தது. இந்துத்வா கொள்கையை பின்பற்றும் சிவசேனா அரசு இதை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி வந்தது.

இந்த நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களால் சிவசேனா ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் நேற்று மாலை உத்தவ் தாக்கரே தலைமையில் மந்திரி சபை கூடியது. இந்த கூட்டத்தில் அவுரங்காபாத் நகரை சாம்பாஜிநகர் என்றும், உஸ்மனாபாத் நகருக்கு தாராஷிவ் என்றும் பெயர் மாற்றுவதற்கான தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன்மூலம் அவுரங்காபாத்திற்கு பெயரை மாற்றும் உணர்வுபூர்வமான பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டு உள்ளது.

டி.பி.பாட்டீல் பெயர்

இதேபோல நவிமும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு மறைந்த தலைவர் டி.பி.பாட்டீலின் பெயரை சூட்டுவதற்கான தீர்மானத்தையும் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது.

மாநில திட்டமிடல் நிறுவனமான சிட்கோ நவிமும்பை விமான நிலையத்திற்கு சிவசேனாவின் நிறுவன தலைவர் மறைந்த பால் தாக்கரேவின் பெயரை சூட்ட பரிந்துரை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

மந்திரி சபை கூட்டத்தில் புனே நகருக்கு ஜிஜாவ் நகர் என்று பெயர் மாற்றம் செய்யவேண்டும் என்றும், நவிமும்பையில் உள்ள சிவ்ரி மற்றும் நவசேவா இடையேயான டிரான்ஸ் ஹார்பர் இணைப்புக்கு மறைந்த முதல்-மந்திரி ஏ.ஆர். அந்துலேவின் பெயரை சூட்டவேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. ஆனால் இந்த கோரிக்கை பரிசீலிக்கப்படவில்லை.

இதற்கிடையே நவிமும்பை விமான நிலையத்திற்கு டி.பி. பாட்டீலின் பெயரை சூட்ட காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்தது.

இந்த மந்திரி சபை உத்தவ் தாக்கரேயின் கடைசி மந்திரி சபை கூட்டமாக அமைந்தது.



Next Story